×

கோவையில் வேலை செய்தராஜஸ்தான் வாலிபரிடம் 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: தகவல் தராத இன்ஸ்பெக்டர் மாற்றம்

கோவை: கோவையில் ராஜஸ்தான் வாலிபரிடம் 2 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 2 தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை சுக்கிரவார்பேட்டை பகுதியில் வடமாநில ஆசாமி ஒருவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக வெரைட்டிஹால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அப்போது அறை பூட்டிக் கிடந்தது.  போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தபோது ஒரு பையில் ஒரு நாட்டுத்துப்பாக்கி, 2 தோட்டாக்களும், வீட்டுக்கு அருகில் இருந்த குப்பை தொட்டிக்குள் ஒரு நாட்டு துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அந்த அறையில் தங்கியிருந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவானிசிங் (27) என்பதும், இவர் கடந்த 10 ஆண்டுக்கு முன் கோவை வந்து பிளைவுட் நிறுவனங்களில் வேலை செய்துள்ளார். 2 மாதத்திற்கு முன் ராஜஸ்தான் சென்றிருந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு கோவை திரும்பியுள்ளார். ஏற்கனவே வேலை செய்த இடத்தில் அவருக்கு மீண்டும் வேலை வழங்காததால், கோவையில் வேலை கேட்டு சுற்றி வந்துள்ளார். அப்போது, அவர் பைக்குள் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததை பார்த்து யாரோ போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சோதனை நடத்த வருவதை அறிந்து, மாயமானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பவானிசிங்கை தேடி வருகின்றனர்.  இதற்கிடையில் நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட தகவலை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்காததால் வெரைட்டிஹால் ரோடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை, மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாறுதல் செய்து நேற்று போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார்.


Tags : Rajasthan ,teenager , Coimbatore, confiscation of 2 guns, inspector, change
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்