×

லஞ்சம் பெற்று அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்தக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சில நாட்கள் மட்டுமே தடை உத்தரவு பின்பற்றப்பட்டது. நாளடைவில் பிளாஸ்டிக் ெபாருட்கள் பயன்பாட்டை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஓட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தாராளமாக உள்ளது. பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்கூடங்களில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டும்காணாமல் உள்ளனர். மதுரை, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகளவில் உள்ளன.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால், விவசாயமும், விவசாய உற்பத்தி பொருட்களும் மதிப்பிழக்கும் நிலை ஏற்படுகிறது. பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்தினால் விவசாய விளைபொருட்களான மூங்கில் பொருட்கள், பனை ஓலை பொருட்கள் உள்ளிட்டவையின் தேவை அதிகரிக்கும். விவசாயிகளுக்கும் போதிய வருமானம் கிடைக்கும். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். இயற்கையை காக்கும் வகையில், பிளாஸ்டிக் பயன்பாடில்லாத தமிழகமாக மாற்ற தேவையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், போதுமான அளவுக்கு குழு அமைத்து கண்காணிக்கவும்,  பிளாஸ்டிக் தடையை முழுமையாகவும், முறையாகவும் அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர், மனு குறித்து தமிழக உள்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், மனுதாரர் தரப்பில் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கத்தை எதிர்மனுதாரர்களாக சேர்த்து மனு செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை அக்.3க்கு தள்ளி வைத்தனர்.


Tags : Government , Bribery, authorities, plastic ban, government
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...