2 லட்சம் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் நாளை தேசிய லோக் அதாலத்

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் கிடக்கும் 2 லட்சத்து 21 ஆயிரம் வழக்குகளை விசாரிப்பதற்காக  நாளை 513 அமர்வுகளில் லோக் அதாலத் நடைபெற உள்ளது. தேசிய சட்டபணிகள் ஆணை குழுவின் உத்தரவின் படி ஒவ்வொரு வருடமும் மார்ச், ஜூலை, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் 2ம் சனிக்கிழமையில் நீண்ட நாட்களாக நீதிமன்றங்களில் நிலுவையில் கிடக்கும் வழக்குகளை முடித்து வைப்பதற்காக லோக் அதாலத் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருடம் வரும் சனிக்கிழமை 14ம் தேதி(நாளை) தமிழகம் முழுவதும் லோக் அதாலத் நடைபெற உள்ளது. அதில் வழக்கு தொடராமல் சட்டபணிகள் ஆணை குழுவிடம் மனு கொடுத்துள்ள தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள், எலக்டிரிக், தண்ணீர் பில் தொடர்பான வழக்குகள், பராமரிப்பு தொடர்பான வழக்குகள் என பல்வேறு வழக்குகளும்.

இதேபோல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும், நில அபகரிப்பு, வருவாய்த்துறை, பணம் மீட்பு, விவாகரத்தை தவிர்த்து கணவன் மனைவியிடையேயான மற்ற வழக்குகள் என பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளது. இதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகளும், மதுரை கிளையில் 6 அமர்வுகளும், மாநில சட்டபணிகள் ஆணை குழுவில் 8 அமர்வுகளும், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவில் 489 அமர்வுகளும் என மொத்தம் 513 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்  1 லட்சத்து 58 ஆயிரத்து 978 வழக்குகள், நீதிமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யாமல் மனு கொடுத்துள்ள 62 ஆயிரத்து 682 வழக்குகளும் விசாரிக்கப்பட உள்ளது.

Related Stories: