×

ஒரே நாடு, ஒரே ரேஷனால் ரேஷன் திட்டத்தில் எந்த பாதிப்பும் இருக்காது: அமைச்சர் காமராஜ் பேட்டி

சென்னை: ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பொது விநியோக திட்டத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்று அமைச்சர் காமராஜ் கூறினார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் சென்னை, எழிலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும், அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் குறித்து யாரும் பேசவில்லை. இருந்தபோதும், பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதால் எனது விளக்கமான பதிலை கூட்டத்தில் பதிவு செய்துள்ளேன்.

இந்த திட்டத்தை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த ஒரு திட்டம் என்கிற அடிப்படையில் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு பெயர் யார் வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளலாம். தமிழகத்தை பொறுத்தவரை, “அனைவருக்குமான பொது விநியோக திட்டம்” என பெயர் வைத்துள்ளோம். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தினால் தமிழகத்தின் பொது விநியோக திட்டம் பாதிக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள். ஆனால், இரண்டு வருடங்கள் ஆகியும் எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த திட்டம் அப்படியே சென்று கொண்டிருக்கிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் ஒரு அங்கம்தான் அனைவருக்குமான பொது விநியோக திட்டம். இதன்மூலம் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு உறுதி அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், வெளிமாநிலத்தில் இருந்து வருகிற தொழிலாளர்கள் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதற்காக கொண்டு வந்துள்ள திட்டம். இதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதில் எந்த பாதிப்பும் இல்லை.

Tags : Kamaraj ,nation , One Country, One Ration by Ration, Minister Kamaraj
× RELATED தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் 2024 – 25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல்