×

பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரிய மனு அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: வைகோ கோரிக்கை நிராகரிப்பு

சென்னை: காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தர வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவரது கோரிக்கையை நிராகரித்தது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதுபோன்ற சூழலில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மெகபூபா உள்பட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,”சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள அண்ணா மாநாட்டுக்காக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் அம்மாநிலத்தில் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து அவர் தற்போது வரை எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதனால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அவரை கண்டுபிடித்து தர வேண்டும். மேலும் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதி உத்தரவில்,” இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்து இடைக்கால உத்தரவு எதையும் எங்களால் பிறப்பிக்க முடியாது. மேலும் காஷ்மீர் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வுதான் விசாரித்து வருகிறது. அதனால் இந்த வழக்கு குறித்து அவர்தான் முடிவு செய்வார்’’ என தெரிவித்து, வைகோவின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

Tags : Supreme Court ,Farooq Abdullah , Farooq Abdullah, Vaiko
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...