×

அதிமுக ஆட்சியில் நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்று நாடகம்: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: அதிமுக ஆட்சியில் நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்று நாடகம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பெரம்பூர் வாத்தியார் என்று அழைக்கப்படும் இரா.அ.சிதம்பரம் சகோதரர் கலைவாணன் இல்ல திருமண விழாவை நேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: நம்முடைய குடும்ப வாரிசுகளுக்கு, நமக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும். ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லையே என்று சிலர் கேட்கலாம். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் மறைந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால், தலைவர் கலைஞர் அந்தப் பெயரை எனக்கு வைத்தார். இந்த பெயர் வைத்த காரணத்தால் நான் பல இடர்களை அனுபவித்திருக்கிறேன். ரஷ்ய நாட்டிற்கு போயிருந்தபோது ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தை முழித்து, முழித்து பார்ப்பார்கள்.

ஏர்போட்டில் கூட பாஸ்போர்ட்டை சோதனை செய்து என்னை உள்ளே அனுப்பும் நேரத்தில் அவ்வளவு கேள்விகள் கேட்டு சங்கடம் கொடுத்தார்கள். ஏனென்றால், ஸ்டாலின் என்ற பெயருக்கு அவ்வளவு பிரச்னை அங்கு. அண்ணா சாலையில் இருக்கும் சர்ச் பார்க் கான்வெண்ட் முன்பு ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்தது. அப் பள்ளியில் எப்படியாவது என்னையும், என் தங்கை தமிழ்செல்வியையும் சேர்க்க வேண்டும் என்று முரசொலி மாறன் சென்றிருந்தார். முரசொலி மாறன் தான் எங்கள் எல்லோரையும் படிக்க வைப்பதற்கு ஒரு காப்பாளராக (கார்டியனாக) இருந்தார். சர்ச் பார்க் கான்வென்ட்டின் தாளாளர் முரசொலி மாறனிடத்தில், ‘இவர்கள் இரண்டு பேரையும் இப்போதே சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், ஸ்டாலின் என்ற பெயரை மட்டும் கொஞ்சம் மாற்றி விடுங்கள். ஏனென்றால், ரஷ்யாவில் அந்தப் பெயரால் மிகவும் பிரச்னை போய் கொண்டிருக்கிறது. எனவே, இந்த பெயரை மட்டும் மாற்றிவிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

உடனே தலைவர் கலைஞரிடத்தில் முரசொலி மாறன் இதை சொன்னபோது, “நான் ஸ்கூலை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர என் பையன் பெயரை மாற்ற மாட்டேன்” என்றார். இது வரலாறு. எனவே, உங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள். முதல்வரும் அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு போய் வந்திருக்கிறார்கள். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டதில், எவ்வளவு ஒப்பந்தங்கள் முடிவாகியிருக்கிறது. எத்தனை நிறுவனங்கள் வந்திருக்கிறது. இதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று சொன்னால், மந்திரிகள் அனைவரும் வெள்ளை அறிக்கையும் கிடையாது, வெள்ளரிக்காயும் கிடையாது என்கிறார்கள். நீங்கள் ஆட்சியில் இருந்தபோது வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்களா என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கின்றார்.

நாங்களும் வெளிநாட்டிற்கு சென்றோம். முதலமைச்சர் செல்லவில்லை, துணை முதலமைச்சராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த, நான் சென்றேன். நான் முதலீட்டை பெறுவதற்காக செல்லவில்லை. இன்று சென்னையை சுற்றி கம்பீரமாக ஓடிக்கொண்டிருக்கிறதே மெட்ரோ ரயில் அதற்காக, ஜப்பான் நாட்டிற்கு சில அதிகாரிகளை மட்டும் அழைத்துச் சென்றேன். ஆனால், நீங்கள் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் போன்று கிளம்பி சென்றுகொண்டிருக்கிறீர்கள்.  இன்னும் ஒன்றரை வருடம்தான் இருக்கிறது. அதற்குள் எல்லா நாட்டிற்கும் சென்று வந்துவிட வேண்டும் என்று ஒரே முடிவோடு, பிரதமர் மோடி எப்படி ஊர் ஊராக, நாடு நாடாக சுற்றிக்கொண்டிருக்கின்றாரோ அதேபோல், இந்த ஆட்சிக் காலம் முடிவதற்குள் சுற்றி முடித்திடவேண்டும் என்று ஒரே கொள்கையோடு நீங்கள் சென்றுகொண்டிருக்கிறீர்கள். சொந்த வேலையாக செல்கின்றோம் என்று அறிவித்துவிட்டு செல்லுங்கள். அதைவிடுத்து, முதலீட்டைப் பெறுவதற்காக செல்கின்றோம் என்று ஒரு நாடகத்தை நடத்திவிட்டு செல்கின்றீர்களே? என்ன முதலீடு என்று அறிவியுங்கள்.

நாங்கள் ஜப்பான் சென்றது, மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, அதற்குரிய நிதியைப் பெற சென்றோம். அதை பெற்று வந்து தந்திருக்கிறோம். ஜெயலலிதா உயிரோடு இருந்த நேரத்தில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்று வேலைவாய்ப்பினை கொடுப்போம் என்று சொல்லியிருந்தார். ஆனால் 14,000 கோடி ரூபாய்க்குத் தான் முதலீடு வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? திமுக ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரெப்சன் கிடையாது. ஆனால் அதிமுக ஆட்சியில் இவை மூன்றும்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் முதலீட்டு ஒப்பந்தம் போட்டாலும், உலக முதலீட்டாளர் மாநாடு என்ற நாடகத்தை நடத்தி கொண்டிருந்தாலும் அதெல்லாம் வெறும் வெட்டி வேஷமாகத்தான் இருக்கிறது. மக்களை ஏமாற்றுவதற்காக நடத்துகின்ற நாடகங்களே தவிர வேறல்ல, இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : regime ,World Investors' Conference ,AIADMK ,MK Stalin , AIADMK rule, World Investors Conference, Drama, MK Stalin
× RELATED திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார...