×

செப். 15 அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் மதிமுகவினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும்: வைகோ அறிக்கை

சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 15ல் நடைபெறும் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா மாநாட்டில் மதிமுக தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்து, கூட்டாட்சிக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் பாஜ அரசு தீவிரமாக இயங்கி வருகிறது. வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் இந்தியா ஒரே நாடாக இருந்ததில்லை. தேசிய இனங்களின் அடையாளங்களையும், இன, மொழி, பண்பாட்டு உரிமைகளையும் பாதுகாப்பதின் மூலம்தான் வேற்றுமையில் ஒற்றுமை நிலவ முடியும். தேசிய ஒருமைப்பாடு என்பது நிலைக்கும் என்று அண்ணா பிரகடனப்படுத்தினார்.

இந்தியாவை ஒற்றை ஆட்சிக்குத் தள்ளும் எதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் ஈட்டி முனையாக திமுக திகழும் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா சுட்டிக்காட்டியதைப் போல, மதிமுக அண்ணாவின் லட்சியப் பாதையில் பயணிக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலம் பெற்றுவிட்ட காரணத்தினாலேயே பல்வேறு தேசிய இனங்களின் கலாச்சார அடையாளத்தை அழித்து, பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறித்து அடக்கி ஆள நினைக்கின்ற மதவாத சனாதனக் கூட்டத்தின் முயற்சிகளை முறியடிக்க இந்திய அரசியலில் மாநிலக் கட்சிகள் பலம்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பலிகொடுத்து, நாசப்படுத்தி வரும் அதிமுக அரசை தூக்கி எறிய வேண்டும்.

அந்த கடமையை நிறைவேற்ற களம் அமைக்க வேண்டியது அண்ணா வழியில் நடைபோடும் மதிமுகவின் அரசியல் பணியாகும். அதற்கு கட்டியம் கூறத்தக்க வகையில் சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 15ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிற அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, தினேஷ் திரிவேதி பங்கேற்கின்றனர். மதிமுக வரலாற்றில், மற்றொரு மைல் கல்லாக அமையப்போகிற இந்த மாநாட்டிற்கு மதிமுக உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Birthday Party Conference , Anna Birthday Party, Mathimukha, Vaiko
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்