×

மயிலாப்பூர் அம்மன் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டில் சிசிடிவி பதிவில் குற்றவாளிகள்: பெண் உள்பட இருவருக்கு வலை

சென்னை: மயிலாப்பூரில் துர்கை அம்மன் கோயிலில் 15 கிலோ எடை கொண்ட ஐம்பொன் கிருஷ்ணர் சிலையை திருடிய குற்றவாளிகள் சிசிடிவி பதிவில் சிக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெருவில் சலவை தொழிலாளர்களுக்கு என தனியாக 125 ஆண்டுகள் பழமைவாய்ந்த துர்கையம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட 15 கிலோ எடையுள்ள 1 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை 25க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற ராகு கால விளக்கு பூஜை நடந்தது. பூஜை முடிந்த பிறகு ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் சிலை மட்டும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி சங்கர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோயிலில் சிசிடிவி கேமரா இல்லாததால் வழக்கில் சற்று தோய்வு ஏற்பட்டது. ஆனால் கோயில் அமைந்துள்ள அப்பர் கோயில் தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து போலீசார் ஆய்வு ெசய்த போது, பெண் உட்பட இருவர் பையுடன் அவசர அவசரமாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதைதொடர்ந்து அவர்களின் புகைப்படத்தை வைத்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்களா என்பது குறித்து கோயில் பூசாரி சங்கரிடம் புகைப்படங்களை காட்டி விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், ஓரிரு நாளில் அவர்களை கைது செய்து சிலை மீட்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : CCTV ,temple ,Mylapore Amman , Mylapore, Amman Temple, Imbon Statue, CCTV
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...