×

‘‘றெக்கை கட்டிப் பறக்குது பார் ஏட்டய்யாவோட சைக்கிள் திட்டம்’’ போலீஸ் ஸ்டேஷன் குப்பை தொட்டியில் ஜெயலலிதா வழங்கிய சைக்கிள்கள்: முறையான திட்டமிடல் இல்லை என குற்றச்சாட்டு

சென்னை: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னையில் உள்ள காவல் நிலையத்துக்கு ரோந்து பணிக்காக சைக்கிள்கள் வழங்கப்பட்டது. அப்போது, `றெக்கை கட்டிப் பறக்குது பார் ஏட்டய்யாவோடா சைக்கிள்...’’ என்று பாராட்டப்பட்டது. ஆனால், தற்போது, இந்த சைக்கிள்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் குப்பை தொட்டியில் கிடக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. திட்டமிடாமல் தொடங்கிய திட்டங்களில் இதுவும் ஒன்று என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை, தலைமை செயலகத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதுதான், “சைக்கிளில் போலீசார் ரோந்து செல்லும் திட்டம்”.  அதன்படி சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் ரோந்து பணிக்காக 200 சைக்கிள்களை ஜெயலலிதா வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்த விழாவுக்கு அப்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

போலீசாருக்கு ரோந்து சைக்கிள் திட்டம் குறித்து போலீஸ் அதிகாரிகள் அப்போது கூறும்போது, “தமிழகத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையினர் சைக்கிளில் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். பழைய காலங்களில் போலீசார் சைக்கிளில் ரோந்து செல்லும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. லத்தி, டார்ச் லைட் மற்றும் விசில் உடன் அந்த காலத்தில் போலீசார் சைக்கிளில் ரோந்து வரும் காட்சி குற்றவாளிகளை கதிகலங்க வைக்கும். இரவு நேரத்தில் விசில் ஊதிக்கொண்டே போலீசார் சைக்கிளில் தெருத்தெருவாக ரோந்து வருவார்கள். கால்நடையாக கூட ரோந்து செல்லும் பழக்கம் அமலில் இருந்தது. சைக்கிள் ரோந்து, கால்நடை ரோந்து திட்டம் அமலில் இருந்தபோது குற்றங்கள் வெகுவாக குறைந்து காணப்பட்டன. ஆனால் தற்போது சைக்கிளில் ரோந்து செல்லாமல் மோட்டார் சைக்கிள், ஜீப், இன்னோவா, ஜிப்சி, சுமோ போன்ற கார்களில் போலீசார் ரோந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் போலீசார் செல்லும்போது குற்றவாளிகளை விரைந்து சென்று பிடிக்க ஏதுவாக இருக்கிறது ஆனாலும் சிறிய சந்துகளில் சென்று குற்றவாளிகளை பிடிப்பது மற்றும் இரவு நேரங்களில் போலீசார் சைக்கிளில் ரோந்து செல்வதற்காக சைக்கிள் ரோந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களில் உள்ள சிறிய தெருக்கள் மற்றும் சந்துகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ள முடியும். குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் காவல்துறையினருக்கு மீண்டும் சைக்கிள் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக, காவல் துறைக்கு 200 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளது” என்றனர்.  அதன்படி ஒரு காவல் நிலையத்துக்கு 2 அல்லது 3 ரோந்து சைக்கிள்கள் என மொத்தம் 200 சைக்கிள்களை ஜெயலலிதா வழங்கினார். இந்த நவீன காலத்தில், மீண்டும் சைக்கிள் ரோந்து முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது தவறான முன்னுதாரணம் என்ற விமர்சனமும் எழுந்தது.

போலீசாருக்கு ரோந்து சைக்கிள் வழங்கப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், போலீசார் இந்த ரோந்து சைக்கிளில் வருவதை பொதுமக்கள் ஒருவர் கூட பார்த்தது இல்லை. மேலும், சைக்கிளில் சென்று குற்றவாளிகளை பிடித்ததாகவும் எந்த தகவலும் இல்லை. தற்போது இந்த ரோந்து சைக்கிளில் அனைத்தும், சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களின் வளாகத்தில் உள்ள குப்பை தொட்டியில் துரு பிடித்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “ஒரு திட்டம் தொடங்கும்போது அந்த திட்டத்தை நிறைவேற்றினால் அது பயன்பாட்டுக்கு சிறந்ததாக இருக்குமா, இல்லையா என்பதை பலமுறை யோசித்து தொடங்க வேண்டும். ஆனால், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆட்சியாளர்கள் மூலம் ஏதாவது ஒரு திட்டத்தை தொடங்கி வைத்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதில்தான் குறியாக உள்ளனர்.

ரோந்து சைக்கிள் திட்டம் தொடங்கும்போது, போலீசார் சைக்கிளில் சென்றால் தொப்பை குறைந்து, அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றும், இரவு நேரங்களில் ஓசை எழுப்பாமல் சென்று குற்றவாளிகளை பிடிக்க முடியும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதில் எதுவும் நடைபெறவில்லை. போலீசாரில் பலர் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, 4 சக்கர வாகனங்களில் செல்லும் நிலையில், மீண்டும் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று சைக்கிள் திட்டம் தொடங்கியது மிகப்பெரிய தவறான திட்டம் ஆகும். இதன்மூலம் ₹20 லட்சத்துக்கு மேல் மக்கள் வரிப்பணம் வீணாகி விட்டது. இனியாவது உயர் அதிகாரிகள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என்றனர்.

Tags : Jayalalithaa ,police station garbage bin , Jayalalithaa, Cycle Project
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...