×

தம்பதியின் சண்டையை விலக்க வந்தவர் தள்ளியதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய கணவன் பரிதாப சாவு: கோயம்பேட்டில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் தம்பதியர் சண்டை போட்டு கொண்டிருந்தனர். அவர்களை விலக்கி விடும் முயற்சியில் கீழே தள்ளியதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய கணவன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் டேவிட் (48). இவரது மனைவி செல்வி. இவர்கள் கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகின்றனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கியுள்ளனர். டேவிட், குடிப்பழக்கம் உடையவர். அடிக்கடி குடித்து விட்டு மனைவியுடன் சண்டை போடுவாராம்.  நேற்று முன்தினம் இரவும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். போதையில் அப்படியே தூங்கி விட்டார். அதிகாலை 3 மணியளவில் எழுந்தார். அப்போதும் போதை தெளியவில்லை. தூக்கத்தில் இருந்த மனைவியை எழுப்பி சண்டை போட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் மனைவியை சரமாரியாக அடித்து உதைத்தார்.
 
இந்த சம்பவத்தை, பஸ்சுக்காக காத்திருந்த சில பயணிகள் பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், அப்பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் சிங்காரவேல் என்பவர், சண்டையை விலக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சண்டை நின்றபாடில்லை. பெண்ணை அடித்து உதைப்பதை அவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. இதில் டேவிட்டை விலக்கி விடும் முயற்சியில் வேகமாக தள்ளினார். கீழே விழுந்ததில், அவ்வழியாக வந்த மாநகர பஸ் சக்கரம், டேவிட் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே டேவிட் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதனால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதுபற்றி கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, டேவிட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிங்காரவேலுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கணவன்-மனைவியின் சண்டையை விலக்கி விடும் முயற்சியில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : death ,bus accident ,Coimbatore , Couple fighting, bus wheeling, husband, death, Coimbatore
× RELATED புதுச்சேரி சோலை நகர் பகுதியில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை