×

தலைமை செயலகத்தில் 2வது நாளாக நல்ல பாம்பு பிடிபட்டது: உயிர் பயத்துடன் பணி செய்வதாக ஊழியர்கள் அச்சம்

சென்னை: தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நல்ல பாம்பு ஒன்று சிக்கிய நிலையில், நேற்று காலையும் ஒரு நல்ல பாம்பு பிடிபட்டது. தலைமை செயலக வளாகத்தில் பாம்புகள் படையெடுப்பதால் ஊழியர்கள், பாதுகாவலர்கள் அச்சம் அடைந்துள்ளனர். உயிர் பயத்துடன் வேலைசெய்வதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில், 4வது நுழைவு வாயில் அருகே சுமார் 2 அடி நீளமுள்ள நல்ல பாம்பு குட்டி பிடிபட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் 1வது மாடியில் பாம்பு செல்வதை அங்கிருந்த ஊழியர்கள் பார்த்துவிட்டு, தலைமை செயலக பாதுகாவலர்களிடம் கூறினர்.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மறைவான ஒரு இடத்தில் இருந்த பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தலைமை செயலகத்தில் சமீப காலமாக பாம்புகள் படையெடுப்பு தொடர் கதையாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன், சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தலைமை செயலக வளாகத்திற்குள் உள்ள லாபியில் சாரைபாம்பு ஒன்று பிடிபட்டது. பின்னர், தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 2வது மாடியில் பெண்கள் கழிவறை அருகே பாம்பு ஒன்று பிடிபட்டது. அப்போது அங்கு இருந்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அதேபோன்று கடந்த இரண்டு வாரத்துக்கு முன், தலைமை செயலகத்தின் 6வது நுழைவு வாயில் எதிரே உள்ள பூங்கா புதருக்குள் ஒரு நல்லபாம்பு செல்வதை பார்த்து, அங்கிருந்த காவலர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ‘‘தலைமை செயலகத்தில் பாம்புகள் நடமாட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஒவ்வொரு நாளும் உயிரை கையில்பிடித்துக் கொண்டுதான் வேலைக்கு வருகிறோம்’’ என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.



Tags : headquarters , Headquarters, good snake, staff
× RELATED சோலைமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 லட்சம்