×

விவசாயிகள், சில்லரை வியாபாரிகளுக்கு மாதம் 3,000 ஓய்வூதியம்: 18 முதல் 40 வயது வரை சேரலாம்,..திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ராஞ்சி: அறுபது வயதை எட்டிய விவசாயிகள், சிறிய கடைக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்வோர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய சட்டப்பேரவை கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். ஜார்கண்ட்  மாநில தலைநகர் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி  பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 60 வயதை எட்டிய விவசாயிகள், சிறிய  கடைக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்வோர் ஓய்வூதியம் பெறும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், ராஞ்சியின் குயிட்கிராம் பகுதியில்  ரூ.465 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 மாடி சட்டப்பேரவை கட்டிடத்தையும்  தொடங்கி வைத்தார். தொடர்ந்து சாஹிப்கஞ்ச் பகுதியில் கங்கை ஆற்றங்கரையில்  கட்டப்பட்டுள்ள சரக்கு முனையத்தையும் ஆன்லைன் மூலம் தொடங்கி வைத்தார்.

`பிரதான்  மந்திரி கிஷான் மான் தான் யோஜனா’’ என்ற திட்டப்படி 60 வயதை எட்டிய  சிறு மற்றும் குறு விவசாயிகள் ஓய்வூதியம் பெறமுடியும். இதற்காக தற்போது 18  முதல் 40 வயதை அடைந்த விவசாயிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம்.  அவர்களுக்கு 60 வயது ஆனதும் மாதம் 3000 ஓய்வூதியமாக வழங்கப்படும். இவர்கள் 18 வயதில் மாதத்துக்கு 55 கட்டி சேர்ந்தால், ஆண்டுக்கு சிறிது, சிறிதாக காப்பீடு பிரிமீயம் சற்றே உயரும். 40 வயதில் அதிகபட்சமாக அவர்கள் ரூ.200 வரை கட்ட வேண்டியிருக்கும். அதன்பின்னர் கட்ட வேண்டியதில்லை. விவசாயிகள் செலுத்தும், காப்பீடு தொகைக்கு நிகரான தொகையை, மத்திய அரசும் செலுத்தும். 60 வயதுக்கு பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க ஆரம்பிக்கும்.  இதேபோல்  பிரதான் மந்திரி லகு வியாபாரி மான் தான் யோஜனா’’ என்ற திட்டப்படி சில்லரை  வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் தங்கள் முதுமைக்காலத்தில்  ஓய்வூதியம் பெறமுடியும்.

இது தவிர சுயதொழில் செய்வோரும் தங்களது  முதுமைக்காலத்தில் ஓய்வூதியம் பெறும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி  வைத்தார். இந்த இரு திட்டங்களிலும் பயன்பெற விரும்புவோர் தற்போது 18 வயது  முதல் 40 வயது வரையிலானவர்களாக இருந்தால் பெயரை பதிவு செய்து கொண்டால் 60  வயதை அடைந்ததும் மாதம் ரூ.3000 ஓய்வூதியம் பெறலாம்.  இது தவிர பிரதமர்  திறந்து வைத்த சரக்கு முனையத்தில் ஒரு ஆண்டில் சுமார் 30 லட்சம் டன்  சரக்குகளை இருப்பு வைக்க முடியும். மேலும் நாடு முழுவதும் 462 இடங்களில்  அமைய உள்ள ஏகலைவா மாதிரி பள்ளிகளில் ஜார்கண்டில் அமைய உள்ள 13  பள்ளிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். இது தவிர
ஜார்கண்டில் ₹1238.92  கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய தலைமை செயலக கட்டிடத்திற்கான  அடிக்கல்லையும் பிரதமர் நேற்று நாட்டினார்.நிகழ்ச்சியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை தாக்கியும், ஊழலை ஒழிப்பது, காஷ்மீரை வளர்ச்சியடைய செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: சிலர் தங்களை சட்டத்திற்கு மேலானவர்கள் என்றும் நீதிமன்றத்தை விட சக்திவாய்ந்தவர்கள் என்றும் கருதினர்.

அவர்கள் தற்போது ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடியவண்ணம் உள்ளனர். மேலும் சிலர் தாங்கள் செல்ல வேண்டிய சரியான இடமான சிறையில் உள்ளனர். வளர்ச்சியே இந்த அரசின் நோக்கம். இன்று நாடு இதுவரை காணாத வேகத்துடன் வளர்ச்சியடைந்து வருகிறது. 100 நாட்களை கடந்துள்ள இந்த அரசு வேகமாக செயல்படுகிறது. இந்த நூறு நாட்களில் நீங்கள் பார்த்த அரசின் திட்டங்கள் வெறும் டிரைலர் போன்றதுதான். விரைவில் முழு படத்தையும் பார்ப்பீர்கள். முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாப்பதற்காகவே கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். தேசிய ஜனநாயக கூட்டணியின் 2வது ஆட்சியில் இதற்கான பணியை தொடங்கியுள்ளோம். முந்தைய ஆட்சி காலத்தில் ஜார்கண்டில் வெளிப்படைதன்மையற்ற நிலை மற்றும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதை அறிவோம்.

ஆனால் முதல்வர் ரகுபர் தாஸ் கடந்த 5 ஆண்டுக்காலத்தில் தீவிர முயற்சி மேற்கொண்டதன் விளைவாக வெளிப்படைத்தன்மையான ஆட்சி ஜார்க்கண்டில் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் மூலம் நாட்டில் 44 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டம் மூலம் நாடு முழுவதும் 2 கோடி வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அமைப்பு சாரா துறைகளான விவசாயம், சிறுவர்த்தகம், மற்றும் கடைக்காரர்களுக்கு ஓய்வூதியம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

காகித பயன்பாடில்லா சட்டப்பேரவை:
பீகாரில் இருந்து ஜார்க்கண்ட் பிரிந்து 19 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தான் தனக்கென சொந்தமான புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை ஜார்க்கண்ட் பெற்றுள்ளது. ராஞ்சியின் குயிட் கிராம் பகுதியில் ரூ.465 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த 3 மாடி கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். காகித பயன்பாடு இல்லாத நாட்டின் முதல் சட்டப்பேரவையாக இது உருவாகியுள்ளது. 39 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சட்டப்பேரவை வளாகத்தில் 57,220 சதுரமீட்டர் பரப்பில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. கட்டிடத்தின் முன்பகுதியில் 37 மீட்டர் உயரத்துக்கு கோபுரம் அமைந்துள்ளது. மழைநீர் சேகரிப்பு மற்றும் சூரியஒளி உற்பத்தி திட்டமும் இங்கு அமைந்துள்ளது. இந்த சட்டப்பேரவைக்கு தேவையான 40 சதவீத மின்சார உற்பத்தி சூரியஒளி உற்பத்தி மூலம் கிடைக்கிறது. இந்த கட்டிடத்தில் இன்று பேரவை கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Tags : retailers , Farmers, retailers, pensioners, PM Modi
× RELATED பந்தலூர் பகுதியில் திடீர் மின் துண்டிப்பால் பாதிப்பு