×

சிவகங்கை அருகே 300 ஆண்டு பழமையான குமிழி மடைத்தூண் கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே கோவானூரில் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அரிய குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் காளிராசா கூறியதாவது: சிவகங்கை அருகே கோவானூரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவானூர் பெரிய கண்மாய் என அழைக்கப்படுகிற மேலக்கோவானூர் கண்மாயில் மக்களால் அளவைக்கல், குத்துக்கல் என்று கூறப்படும் இரட்டைத்தூண் குமிழி மடை ஒன்று காணப்படுகிறது. இத்தூண்களின் உள்பகுதிகளில் கல்வெட்டு எழுத்து உள்ளது. சோழர், பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு குமிழி மடை அமைப்பு ஏரி, குளங்கள் கண்மாய்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை நீரையும், வண்டலையும் தனித்தனியே வெளியேற்றுகிற வகையில் அமைக்கப்படும். பொதுவாக மடைகள் கரையோரங்களில் காணப்படும். ஆனால் கோவானூரில் உள்ள குமிழிமடை கண்மாயின் பள்ளமான நடுப்பகுதியில் காணப்படுகிறது. மேலும் சுண்ணாம்பு செங்கல் காரைக்கட்டு அரை வட்ட வடிவில் மடைத்தூணிலிருந்து கரையை நோக்கி செல்கிறது.

இந்த மடைத்தூண் சுமார் 10 அடி உயரமுள்ளது. தூணின் வெளிப்புறத்தில் முகம் போன்ற அழகிய வடிவமைப்பு இரண்டு தூண்களிலும் காணப்படுகின்றன. கல்வெட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள தூணின் உள்பகுதியில் ‘சகாத்தம் 1630 மேல் செல்லா நின்ற விரோதி ஆண்டு வைகாசி மாதம் 12ம் தேதி ரகுனாத முத்து வீரத்தேவராகிய பூவணனாத தேவர் கட்டி விச்ச ரகுனா’ என்றும் மேற்குப்பகுதியில் உள்ள தூணின் உள்பகுதியில் ‘த பழவன மடை காளிசுரம் பிள்ளை மணியாச்சில் நட்ட மடை தூண்’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தூணில் உள்ள எழுத்துகள் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

Tags : bubble capsule ,Sivaganga , Sivaganga, invention
× RELATED சிவகங்கை: பாஜக கூட்டணி வேட்பாளர்...