×

சிறப்பான நீதி நிர்வாகத்தை கருத்தில் கொண்டு சில மாற்றங்களை நீதிபதிகள் குழு மேற்கொண்டுள்ளது: தஹில் ரமானி இடமாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம்

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விளக்கம் அளித்துள்ளது. முழுமையாக பரிசீலித்து நீதிபதிகள் குழு ஒருமனதாக எடுத்த முடிவின் படி தலைமை நீதிபதி மாற்றப்பட்டுள்ளார். வேறு சில மாநில நீதிபதிகள் மாற்றமும் உச்சநீதிமன்ற கொலீஜியம் (நீதிபதிகள் குழு) இதுபோல் முடிவு செய்துள்ளது. சிறப்பான நீதி நிர்வாகத்தை கருத்தில் கொண்டு சில மாற்றங்களை நீதிபதிகள் குழு மேற்கொண்டுள்ளது.

நீதிபதிகள் இடமாற்றத்துக்கு காரணத்தை கூறுவது நீதித்துறை நலனுக்கு உகந்தது அல்ல. அதே நேரத்தில் அவசியம் ஏற்பட்டால் இடமாற்றத்துக்கான காரணத்தை நீதிபதிகள் குழு தெரிவிக்க தயங்காது என்று ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விளக்கமளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் குழு கடந்த வாரம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்தியாவின் மிகப்பெரிய உயர்நீதிமன்றமான 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து இந்தியாவின் மிகச்சிறிய நீதிமன்றமான 3 நீதிபதிகள் கொண்ட மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியை மாற்ற பரிந்துரை செய்திருப்பது நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு மாற்றம் செய்ததற்கு வக்கீல் சங்கங்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தலைமை நீதிபதி தஹில் ரமானி தன்னை மாற்றம் செய்யும் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தனது தலைமை நீதிபதி பதவியை கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். அந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார்.இந்நிலையில், கொலிஜியத்தின் முடிவை தலைமை நீதிபதி தஹில் ரமணி மதிக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Tags : panel ,judges ,Supreme Court , Tahil Ramani, Supreme Court
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...