×

நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான நிலையில் உள்ளது: காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கான கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு

புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான நிலையில் உள்ளது என்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களுக்கான கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்களான குலாம் நபி ஆசாத், அகமது படேல், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி மற்றும் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மாநிலங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் விரைவில் நடப்பதையொட்டி அம்மாநிலங்களின் நிலவரம் மற்றும் தேர்தலை சந்திக்க தேவையான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் தீவிரமாக இயங்கினால் போதாது. வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தாமல் அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு மக்களை திசைதிருப்பி வருகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : country ,Sonia Gandhi ,leaders ,Congress , Economy, Congress, Consultative Meeting, Sonia Gandhi
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!