×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலய தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

*தொடர்ந்து நிரப்ப பக்தர்கள் கோரிக்கை

திருவாரூர் : திருவாரூரில் தியாகராஜசுவாமி கோயிலின் கமலாலய தெப்ப குளத்தில் பொது பணி துறையினர் மூலம் நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் இருந்து வருகிறது. சைவசமய தலங்களில் முதன்மையான தலமாக இருந்து வரும் இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது.இதேபோல் இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், 5 வேலி பரப்பளவிலான கமலாலய குளமும் இருந்துவருகிறது. கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர விழாவில் ஆழி தேரோட்ட விழாவும் பின்னர் கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.


இந்நிலையில் சுமார் 20 அடி ஆழம் கொண்ட இந்த குளத்தில் இருந்து வரும் நீரின் அளவை பொறுத்தே நகரின் 4 பகுதிகளிலும் சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் இருந்து வரும் நிலையில் தற்போது கடந்த 4 மாத காலமாக சுட்டெரித்து வந்த வெயில் காரணமாக இந்த குளத்தில் இருந்து வந்த பெரும்பாலான நீர் வற்றி நீர்மட்டமானது 7 அடிக்கு கீழே குறைந்தது. இதன் காரணமாக சுற்றுப்புற பகுதிகளிலும் நீர்மட்டமானது குறைந்ததால் பொது மக்கள் மிகவும் துன்பப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து தற்போது மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து கடந்த 2 தினங்களாக ஆறுகளில் நீர் திறந்து விடப்படுவதால் இந்த கமலாலய குளத்திற்கு நீர் வரும் பாதையான ஓடம்போக்கி ஆற்றிலிருந்து நேற்று முன்தினம் முதல் பொதுப்பணி துறையினர் மூலம் நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 தினங்களில் சுமார் ஒரு அடி அளவில் தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில் இதே போன்று தொடர்ந்து 10 தினங்கள் வரையிலாவது நீரை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Thiruvarur Thyagaraja Swamy Temple , Tiruvarur ,Thiyaraja swami Temple ,water,
× RELATED திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில்...