×

சிவகங்கையில் பத்து ஆண்டுகளாக கண்ணாமூச்சி காட்டும் புறவழிச்சாலை திட்டம்

சிவகங்கை : சிவகங்கையில் பத்தாண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டம் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இத்திட்டத்தை அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மாவட்டத் தலைநகரான சிவகங்கை வழியே மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலை, திருப்புத்தூர் சாலை, மானாமதுரை சாலை என முக்கியச் சாலைகள் செல்கின்றன. இதனால் கனரக வாகனங்கள் போக்குவரத்து அதிகரித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருப்புத்தூர் சாலை மற்றும் மானாமதுரை சாலையை இணைக்கும் வகையில் பெருமாள்பட்டியில் இருந்து சாமியார்பட்டி வரை புறவழிச்சாலை தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. மற்றொரு புறவழிச்சாலையான திருப்பத்தூர் சாலையில் காஞ்சிரங்காலில் இருந்து மானாமதுரை சாலையில் உள்ள கீழக்கண்டனி வரை சாலை அமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை.இச்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதாகும். இந்த சாலை காஞ்சிரங்காலில் இருந்து சூரக்குளம், பையூர் வழியாக கீழக்கண்டனி வந்தடையும். சுமார் 10.6 கி.மீ நீளமுள்ள இச்சாலை சூரக்குளம், கீழக்கண்டனி ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்கிறது. இச்சாலைக்காக சுமார் 160க்கும் மேற்பட்டோரிடம் 15.26 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை இதுவரை பணிகள் தொடங்கப்படாததால் திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற அச்சம் சிவகங்கை நகர்வாசிகளிடம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்னரே போக்குவரத்து நெரிசல் உள்ளது என்பதற்காக திட்டமிடப்பட்ட சாலையை தற்போது வரை போடாமல் உள்ளனர். தற்போது இன்னும் கூடுதல் நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஏன் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என தெரியவில்லை. உடனடியாக புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நெடுஞ்சாலைத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: திட்ட அறிவிப்பிற்கு பின்னர் அரசு சார்பிலான அடுத்த கட்ட நடவடிக்கை, நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்தே பணிகள் தொடங்கப்படுவது குறித்து தெரியும் என்றார்.


Tags : Sivaganga , Byepass Road,Sivagangai ,10Years
× RELATED சிவகங்கை மருத்துவமனை செல்லும்...