×

ஜம்மு-காஷ்மீரின் கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் லாரி பறிமுதல்: பயங்கரவாதிகளின் சதி திட்டமா என விசாரணை

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் லாரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயல்வதாக தகவல் வெளியான நிலையில், தற்போது வெடிபொருட்கள் வைக்கப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் சதித்திட்டமா? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில், சர்வதேச கவனத்தை பெறுவதற்கும் அந்நாடு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

மேலும், சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல, காஷ்மீரில் மிக பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், எல்லையில் பயங்கரவாதிகள் முகாமிட்டுருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுக்காப்பு போடப்பட்டுள்ளன. மேலும், நேற்று காலை காஷ்மீரின் சோபூரில் நடைபெற்ற என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மிக முக்கிய பயங்கரவாதி ஆசிப் எனபவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். இதனை தொடர்ந்து, பாகிஸ்தானை சேர்ந்த 40 தீவிரவாதிகள் எல்லைத் தாண்டி காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

அவர்கள் ஆயுதப்பயிற்சி பெற்றவர்கள் என்றும் நவீன ஆயுதங்களை வைத்துள்ளதாகவும் உளவுத்துறை தகவல் அளித்திருந்தது. தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக ஜம்மு-வின் கத்துவா பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் ஏ.கே.47 ரக துப்பாகிகள் மேலும் பல ஆயுதங்களுடன் லாரி ஒன்று பிடிபட்டுள்ளது. இதையடுத்து லாரியில் இருந்த 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆயுதங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யார் அனுப்பியது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கியமாக கத்துவா பகுதியில் ஆப்பிள் போன்ற விளைபொருள்களை மற்றொரு இடத்திற்கு கொண்டுசெல்ல கனரக வாகனங்கள் பயன்படுத்த படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டே ஆயுதங்களை லாரி மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனபது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : Larry ,Jammu ,Kathua ,Kashmir , Jammu - Kashmir, Kathua, Ammunition, Weapon, Larry, Confiscated
× RELATED லால்குடி அருகே மூட்டை மூட்டையாக...