ஏற்கனவே பரோல் நீட்டிப்பு பெற்ற நிலையில் மேலும் அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்த நளினி: சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: ஏற்கனவே பரோல் நீட்டிப்பு பெற்ற நளினி, மேலும் அவகாசம் கோரியுள்ளதை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக 6 மாதம் பரோல் வழங்கவேண்டும் என்று தமிழக அரசிடம் முறையிட்டார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பரோல் கேட்டு அவர் மனுதாக்கல் செய்தார். வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மகள் திருமண ஏற்பாடு செய்வதற்காக நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து நளினி ஒரு மாதம் பரோலில் கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி சென்றார்.

வேலூரில் தங்கியிருக்கும் அவர் பரோல் காலம் முடிந்து ஆகஸ்ட் 25ம்தேதி சிறைக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில, மகளி்ன் திருமண ஏற்பாடுகள் முடியாததால் பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மகளின் திருமண ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று நளினி கூறுவதால், அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோலை நீட்டிக்கிறோம் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில், தனது பரோலை அக்டோபர் 15ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், இலங்கையில் இருக்கும் எனது மாமியார் வருவதற்கு தாமதம் ஆவதால், எனது பரோல் காலத்தை நீட்டிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மாமியாருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், இந்தியாவற்கு வருவதில் தாமதம் ஆவதாகிறது. இம்மாத இறுதியில் அவர் இந்தியா வருவார், என்று கூறியிருந்தார். நளினியின் இந்த மனுவானது, நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்கா ராமன் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினிக்கு 2வது முறையாக பரோலை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வெவ்வெறு காரணங்களை கூறி நளினி பரோல் நீட்டிப்பு கேட்பதை ஏற்க முடியாது என்று அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Nalini ,Madras High Court , Rajiv Gandhi, Murder, Nalini, Madras High Court, Parole
× RELATED சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி...