×

முதல்வரின் துபாய் பயணம் தமிழ் தொழிலதிபர்கள் அதிருப்தி: தமிழ் அமைப்பினரையும் சந்திக்கவில்லை

துபாய்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம், தங்களுக்கு அதிருப்தியை தருவதாக அமைந்தது என்று துபாய்வாழ் தமிழ் தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது ஐக்கிய அரபு  எமிரேட்ஸ் தலைநகரமான துபாய் வந்தபோது பிசினஸ் லீடர்ஸ் போரம் என்ற அமைப்பின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் தமிழக தொழிலதிபர்கள் மற்றும் தமிழர்களோடு தனி நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை இதுகுறித்து துபாய் வாழ் தமிழர்கள் பெரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முதல்வரின் நிகழ்ச்சிநிரல் குறித்து அவர் வரும் வரை  வெளிப்படையான தகவல் இல்லாததால் பெரும்பாலானோர்  அதிருப்தி தெரிவித்தனர். மேலும் முதலீட்டாளர் மாநாட்டுக்கு பெரும்பாலான தமிழ் தொழில் அதிபர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை.

மேலும் முதலீட்டு மாநாடு முடிந்ததும் தமிழ் அமைப்பினரை சந்திப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் முதல்வரை சந்திக்க சென்று காத்திருந்தனர். அப்போது வெளிநாட்டு தொழில் முதலீடுகளை கவனிக்கும்  ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பெரும்பாலானோரை அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட சில தொழிலாளர்கள் மட்டும் சந்திக்க அனுமதி தரப்பட்டது. இதனால் தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலானோர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர் இதுகுறித்து தமிழக தொழில் அதிபர்கள் கூறுகையில், ‘‘கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் வருகை தரும்போது அந்த மாநிலம் சார்ந்த வெளிநாடு  வாழ் மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து கூட்டங்கள் நடத்தி குறைகளை நிவர்த்தி செய்வார்கள். அதுபோன்று தமிழக முதல்வர் வரும்போதும் நடைபெறும் என்று நினைத்த நிலையில் தலைகீழாக பெரும்பாலான தமிழர்களை முதல்வர்  சந்திக்காமலேயே சென்றுவிட்டது, இங்குள்ள தமிழர்களை பெரும் ஏமாற்றம் அடைய செய்துவிட்டது’’ என்றனர்.

Tags : Tamil ,CM ,trip ,Dubai , முதல்வர், துபாய் பயணம்,தமிழ் தொழிலதிபர்கள்
× RELATED 1000 கோடிகள் கடன் பெற்ற தொழில் அதிபர்கள்...