×

பிரிட்டன் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ரத்து செய்த பிரதமர் போரிஸ் முடிவு சட்ட விரோதமானது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அக்டோபர் 14 வரை ரத்து செய்த பிரதமர் போரிஸ் ஜான்சனின் முடிவு சட்ட விரோதமானது என ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 31ம் தேதியாகும். இதில் ஒப்பந்தம் எதுவும் இன்றி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற பிரதமர் முடிவு செய்துள்ளார். இதை   விரும்பாத எதிர்க்கட்சி எம்பிக்கள் 75 பேர் பிரக்சிட் தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதை தவிர்க்க பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த வாரம் தொடங்கி வரும் அக்டோபர் 14ம் தேதி வரை  நாடாளுமன்ற கூட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரதமரின் அதிகாரத்தில் தலையிட விரும்பவில்லை என கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில்  இந்த வழக்கின் முழு தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. 3 நீதிபதிகள் அடங்கிய குழு பிரதமரின் நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் தங்களது உத்தரவில் `நாடாளுமன்ற கூட்டத்தொடரை வரும் அக்டோபர் 14ம் தேதி வரை ரத்து  செய்துள்ள பிரதமரின் முடிவு சட்டவிரோதமானது’ என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த உத்தரவு குறித்து பிரிட்டன் அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் `நீதிமன்றம் இன்று அளித்த உத்தரவு எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’ என்றார்.
உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான முழுவிசாரணை வரும் 17ம் ேததி விசாரணைக்கு வருகிறது. வரும் அக்டோபர் 14 வரை நாடாளுமன்ற கூட்டம் நடைபெறாது என்பதால் அதன்பின்னர் அரசியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும்போது பிரக்சிட் தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர பிரதமர் திட்டமிட்டுள்ளதாக  தெரிகிறது.


Tags : Boris ,session ,Britain ,High Court , UK Parliament, High Court
× RELATED டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண,...