×

லாரி விபத்தில் படுகாயமடைந்த ராணுவ வீரருக்கு 5.7 லட்சம் இழப்பீடு: வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த ராணுவ வீரருக்கு 5.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து ஆண்டுக்கு 7.5 சதவீத  வட்டியுடன் கணக்கிட்டு 2  மாதங்களுக்குள் வழங்க வேண்டும். இந்த தொகையை லாரி  ஓனரிடம் இன்சூரன்ஸ் நிறுவனம் வசூலித்துக்கொள்ளலாம் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சென்னை வாகன விபத்து வழக்குகள் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கொளத்தூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் எஸ்.ஜோதி. அசாமில் ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வந்தார். இவர் தனது சக அதிகாரியுடன் கடந்த 2009 நவம்பர் 22ம் தேதி ராணுவ வாகனத்தில் கவுகாத்தி ரயில் நிலையம் நோக்கி சென்று  கொண்டிருந்தனர்.  இவர்களது கார் பஞ்சாபரி பகுதியில் உள்ள கலாசேத்ரா அருகே சென்றபோது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த லாரி இவர்களது கார் மீது மோதியது. இதில் காரை ஓட்டிச்சென்ற ராணுவ டிரைவர் சம்பவ இடத்தில்  பலியானார். ஜோதி மற்றும் அவருடன் சென்றவர் படுகாயமடைந்தனர். பின்னர் இவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து தனக்கு இழப்பீடு வழங்க கோரி ஜோதி சென்னையில் உள்ள வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.ரேவதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வி.எஸ்.சுரேஷ்  ஆஜராகி லாரி டிரைவர் கவனக்குறைவாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் லாரியை ஓட்டியதால் விபத்து நடந்துள்ளது என்று வாதிட்டார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓனர் தரப்பிலும், லாரி இன்சூரன்ஸ் செய்யப்பட்ட யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பிலும் வாதிடப்பட்டது.  வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ‘‘லாரியை ஓட்டி சென்றவர் உரிய லைசென்ஸ் வைத்திருக்கவில்லை. அதனால் லாரி ஓனருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், லாரி ஓனர் தரப்பில் எந்த  ஆவணங்களும் தரப்படவில்லை. அதே நேரத்தில் லாரி இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது.  

எனவே இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரருக்கு ₹5 லட்சத்து 69,500 இழப்பீடாக தரவேண்டும். இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு 2 மாதங்களுக்குள் தர வேண்டும். இந்த  தொகையை லாரி ஓனரிடம் இன்சூரன்ஸ் நிறுவனம் வசூலித்துக்கொள்ளலாம்’’ என்று தீர்ப்பளித்துள்ளது.

Tags : Vehicle Accident Tribunal , Truck Accident, Army Soldier, Vehicle Accident Tribunal
× RELATED தூய்மை பணியாளர் விபத்து இழப்பீடு...