×

மயிலாப்பூர் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் கிருஷ்ணர் சிலை திருட்டு: அறங்காவலர்களிடம் தீவிர விசாரணை

சென்னை: மயிலாப்பூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோயிலில் 15 கிலோ எடை கொண்ட ஐம்பொன் கிருஷ்ணர் சிலை மாயமாகி உள்ளது. இதுதொடர்பாக கோயில் அறங்காவலர்களிடம் போலீசார் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர் அப்பர் கோயில் தெருவில் சலவை தொழிலாளர்களுக்கு சொந்தமான 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயில் முழுக்க சலவை தொழிலாளர்கள் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. அப்பகுதியில் சக்திவாய்ந்த கோயில் என்பதால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் நிவர்த்தி கடனாக  பக்தர்கள் பலர் ஐம்பொன் மற்றும் பித்தளை, வெள்ளி சிலைகளை கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கி உள்ளனர்.இந்த கோயிலுக்கு அறங்காவலர்களாக சலவை தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பலராமன், ஜீவா, குணசேகரன், ரவி, ரமேஷ்,  தங்கதுரை ஆகிய 6 பேர் உள்ளனர்.

கோயிலில் உள்ள ஆபரணங்கள் மற்றும் அனைத்து பணிகளையும் இந்த 6 பேர் கொண்ட குழுவினர்கள் தான் ெசய்து வருகின்றனர். கோயில் பூசாரியாக சங்கர் உள்ளார். இந்த கோயிலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் பக்தர் ஒருவரால் 15 கிலோ எடையுள்ள 1 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த  சிலை துர்க்கை அம்மன் கோயிலில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோயிலில் ேநற்று முன்தினம் 25க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற ராகு கால விளக்கு பூஜை நடந்தது. பூஜை முடிந்த பிறகு ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் சிலை மட்டும் மாயமாகி இருந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி சங்கர், சிலை திருடுபோனது குறித்து அறங்காவலர்கள் 6 பேரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி அறங்காவலர்கள், திருடுபோன கிருஷ்ணர் சிலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிலை திருட்டு குறித்து அறங்காவலர்கள் சார்பில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகளை ஆய்வு செய்தனர். கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. இதனால் அப்பர் கோயில் தெருவில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோயிலில் நடந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்ட 25க்கும்  மேற்பட்ட பெண்கள் மற்றும் கோயில் அறங்காவலர்களாக உள்ள 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.பக்தர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய கிருஷ்ணர் சிலை மாயமான சம்பவம் மயிலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது

Tags : Imbon Krishna ,Mylapore ,temple , Mylapore Century, Temple Idol Krishna Statue, Thieves and Pilgrims
× RELATED இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 9ம்...