×

மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக அதிரடி மாற்றம்: விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர்

சென்னை: அரசுப் பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. மேலும், தொடக்கப் பள்ளிகளை மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் பணியும்  தொடங்கியுள்ளது. இதுபோன்ற  பிரச்னைகளால் தற்போது கல்வித்துறை பெரும் குழப்பத்தில் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களின் படிப்பும் பிரச்னையில் சிக்கியுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் 38 ஆயிரம் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் நடவடிக்கை கடந்த மாதம் முதல் தொடக்க கல்வித்துறையும், பள்ளிக்  கல்வித்துறையும் செய்து வருகின்றன. குறிப்பாக 25 ஆண்டு முதல் 30 ஆண்டுகள் பணி மூப்பு உள்ளவர்களும் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்படுகின்றனர். 100 கிமீ தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கும் சிலர் மாற்றப்பட்டுள்ளனர்.  இதற்கு  முதலில் எதிர்ப்பு இருந்ததால் பணியிட மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி  வைக்கப்பட்டது.

 இந்நிலையில், பணியிட மாறுதல் உத்தரவுகள் பெற்ற ஆசிரியர்கள் உடனடியாக அந்தந்த இடங்களில் பணியில் சேர வேண்டும் என்றும் பள்ளிக்  கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை வலியுறுத்தி வருகிறது. தற்போது கல்வித்துறை பணியிட மாற்ற விதிகளை மீறி பணி நிரவல் என்ற பெயரில் சீனியர் ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு வேறு ஒன்றியம், மாவட்டம் விட்டு வேறு மாவட்டம்  என 2000 பேர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அந்தந்த ஒன்றியங்களில் பணியாற்றும் சீனியர்கள் அந்தந்த ஒன்றியத்தில் இருக்கலாம், ஜூனியர்கள் தான் மாற்றப்பட வேண்டும் என்ற விதி இருந்தும் சீனியர்கள் தான் மாற்றப்படுகின்றனர்.  இதனால், ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.  குறிப்பாக மாணவர்கள் எண்ணிக்ைக குறைவாக உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுகின்றனர். இதனால் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் அனைத்தும் ஓராசிரியர் பள்ளிகளாக  மாற்றப்படுகின்றன. அதில் ஒரு ஆசிரியருக்கு மேல் இருந்தால் அந்த ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு ஒன்றியத்திலும் செயல்படும் 5 முதல் 7 தொடக்கப் பள்ளிகளை மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் பணியும் நடக்கிறது. அப்படி இணைக்கப்படும் பள்ளிகளை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதால், இப்போது மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகளாக மாறிவிட்டனர். அதனால், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடுகளை தங்களிடம்  ஒப்படைக்க வேண்டும் என்று மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்கின்றனர். மேலும், பள்ளிக்கு வருவதற்கு முன்னதாக குறிப்பிட்ட மேனிலைப் பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு  பிறகு தங்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் கல்வித்துறையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதால், பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் என்று இரண்டு தரப்பிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதில் மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் திணறி வருகின்றனர். இது போன்ற பிரச்னைகளால் கல்வித்துறையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


Tags : Transfer of Students, Schools, Oracle Schools, Teachers
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...