×

தா.பழூர் பகுதியில் குறுவை சாகுபடி நடவு பணி தீவிரம்-உரம் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை

தா.பழூர்: தா.பழூர் பகுதியில் குறுவை சாகுபடி நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. உரம் விலை உயர்வால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கண்ணி, குறிச்சி, தென்கச்சி பெருமாள் நத்தம், குடிகாடு, அண்ணகாரன் பேட்டை, காரைக்குறிச்சி, அருள்மொழி, ஸ்ரீபுரந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி முடிவுற்ற நிலையில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் நீர் இறைத்து குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.‌சம்பா சாகுபடியில் தொடர் புயல் மழையால் பெரும் பாதிப்படைந்த விவசாயிகள் பாதி விளைச்சல் கூட கிடைக்காத நிலையில் கடன்களை வாங்கி மீண்டும் அடுத்தகட்டமாக குறுவை சாகுபடி துவங்கியுள்ளனர். தற்போது நடவு செய்யப்படும் குறுவை சாகுபடிக்கு இயந்திர நடவுக்கு அரசு மானியம் வழங்கியும் மேலும் உரத்திற்கு மானியம் வழங்கியும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சம்பா சாகுபடிக்காக அரசு உரம், மானிய விலையில் வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதுபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இயந்திரம் மூலம் நடவு நடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கியது பயனுள்ளதாக இருந்தது. தற்போது குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆள்பற்றாக்குறை மற்றும் விதை நெல் குறைந்து அளவே பயன்படுவதால் அதிகப்படியாக இயந்திர நடுவே செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு இயந்திர நடுவிற்கு என அரசு வழங்கிய மானியம் தற்போது வழங்கப்படவில்லை. அது போல சம்பா நெல்லுக்கு வழங்கும் உரமானியம் குறுவை சாகுபடிக்கு வழங்கப்படுவதில்லை.இது ஒருபுறம் இருக்க கடன்களை வாங்கி விவசாயத்திற்கு செலவு செய்யும் விவசாயிகளுக்கு தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள திடீர் விலை உயர்வு மிகவும் வேதனையாக உள்ளது. 1100, 1200 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்த உரம் தற்போது 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் விவசாயத்தை செய்வதா அல்லது இப்படியே விட்டு விடுவதா என உள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் குறைந்தது 50 லிருந்து 100 மூட்டைகள் வரை உரம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மூட்டைக்கு 800 ரூபாய் விலை உயர்வு என்பது சாமானிய மக்களை வயிற்றில் அடிப்பதற்கு சமம். மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு விலை உயர்வு என்பது இல்லாத நிலையில் உரத்திற்கு மட்டும் விலை உயர்வு அடிக்கடி இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்….

The post தா.பழூர் பகுதியில் குறுவை சாகுபடி நடவு பணி தீவிரம்-உரம் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Palaur ,T.D. PALUR ,Palur ,T.A. ,Dinakaran ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது