×

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் 20 ஆயிரம் பணியாளர்களுக்கு 7வது ஊதிய உயர்வை அமல்படுத்த மறுப்பு

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களிலும் 7வது ஊதிய உயர்வை அமல்படுத்த மறுத்து விட்டதாக கோயில் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் அர்ச்சகர் இளநிலை உதவியாளர், எழுத்தர், மேலாளர், அர்ச்சனை சீட்டு வழங்குபவர்கள், துப்பரவு பணியாளர், காவலர் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களை போன்று 7வது ஊதியக்குழுப்படி சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையேற்று 7வது ஊதிய குழு அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்து அறநிலையத்துறை செயலாளர் அபூர்வ வர்மா உத்தரவிட்டார். மேலும், இந்த திருத்திய ஊதியம் மற்றும் அகவிலைப்படிக்கான பணப்பயன் கடந்த 2017 அக்டோபர் 1ம் தேதி வழங்கப்படுகிறது என்றும், திருத்திய வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஊர்திப்படி கடந்த ஜூலை 1ம் தேதி வழங்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை உடனடியாக அனைத்து கோயில் செயல் அலுவலர்களும் அமல்படுத்த வேண்டும் என்று ஆணையர் பணீந்திர ரெட்டி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். ஆனால், தற்போது வரை கோயில் பணியாளர்களுக்கு 7 வது ஊதியக்குழு உயர்வை பெரும்பாலான கோயில்களில் அமல்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தற்ேபாது வரை பணியாளர்களுக்கு 7வது ஊதிய உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஊதிய உயர்வை அனைத்து கோயில்களிலும் அமல்படுத்தாவிட்டால் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கோயில் பணியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறும் போது, 7வது ஊதியக்குழு ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி போராட்டம் நடத்தினோம். அதன்பேரில் கமிஷனர் ஊதிய நிர்ணய குழு அமைத்தார். அந்த குழு பரிந்துரையின் பேரில் தான் தற்போது ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதிகாரிகள் தற்போது வரை அந்த ஊதிய உயர்வை அமல்படுத்தாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் கமிஷனர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரைவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.

Tags : Department of Charity ,temples , Refuse to implement ,7th pay rise, 20 thousand employees
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...