×

அம்மா சிமென்ட் வாங்குவதற்கு லஞ்சம் : வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

சென்னை: காஞ்சிபுரத்தில் கையூட்டு கொடுத்தால் தான் அம்மா சிமென்ட் வாங்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. பயனாளிகளை மிரட்டி லஞ்சம் வாங்கும் வீடியோ ஆதாரம் வெளியாகி, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் நடுத்தர மக்கள் வீடு கட்டவோ, பழுது பார்க்கவோ 1200 சதுர அடிக்குள் வீட்டுமனை வைத்துள்ளவர்களுக்கு 600 மூட்டை வரை மானிய விலையில் அம்மா சிமென்ட் வழங்கப்படுகிறது.
இதை பெறுவதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வீட்டுமனை பட்டா உடன் கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்புதல் பெற்று தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கிடங்கில் உள்ள அம்மா சிமென்ட் விற்பனையக அலுவலர்களிடம் வழங்க வேண்டும். விண்ணப்பப்படிவம் பெற்றவுடன் ஆன்லைனில் பதிவு செய்து ஒரு வாரத்தில் தகுதியுள்ள பொதுமக்களிடம் வங்கியில் பணம் கட்டும்படி கூறுவார்கள். அதை செலுத்தினால் மொத்தமாக 100 மூட்டையாகவோ அல்லது 50, 50 மூட்டைகளாகவோ பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் 400க்கு மேல் விற்கும் சிமென்ட் வாங்குவதைவிட மானிய விலையில் 190க்கு கிடைக்கும் அம்மா சிமென்ட் வாங்குவதற்கு பொதுமக்கள் நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலோ அல்லது பூமாலை வணிக வளாகத்தில் உள்ள சிமென்ட் கிடங்கிற்கோ செல்கின்றனர்.

அங்கு விண்ணப்பம் வாங்கி, கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து ஒப்புதல் பெற்று வங்கிக்கு சென்று பணம் செலுத்தி ஆன்லைனில் தகுதி பெறுவது வரை காத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றினாலும், அங்கே இருக்கக் கூடிய அலுவலர்களை கவனித்தால் மட்டுமே சிமென்ட் கிடைக்கும் என்பதை உறுதியாக நம்பலாம் என்ற நிலை உள்ளது. பொதுமக்ககளுக்கு குறைந்த பட்சம் 50 மூட்டை சிமென்ட் உத்தரவாதம் ஆனபிறகு, அதை கொண்டுவர அலுவலகம் சென்று, அவர்களுக்கு குறைந்தது 500 தர வேண்டும். அதன்பிறகு ஏற்ற கூலி, இறக்குவதற்கு கூலி என கணக்கிட்டால் 190 என்பது 290 அளவுக்கு சென்றுவிடுவதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே வசிக்கும் ரகுபதி என்பவர், தனக்கு அம்மா சிமென்ட் வேண்டுமென விண்ணப்பித்தார். பின்னர் அவர், அலுவலகம் சென்றபோது அவரிடம், அங்கிருந்த அலுவலர்கள் லஞ்சமாக 500 பெற்று கொண்டனர்.

ஆனால், அவருக்கு உரிய மரியாதை கொடுக்காமல் ஒருமையில் வா, போ என பேசியுள்ளனர். இதனால் அவர், அங்கிருந்து வெளியேறிவிட்டார். இச்சம்பவம் நடந்தபோது, செல்போன் மூலம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து ரகுபதி கூறுகையில், அலுவலர்களின் வீட்டு சிமென்டை குறைந்த விலையில் தருவதுபோல், கையூட்டு கொடுத்தால் தான் சிமென்ட் வழங்க முடியும் என மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள் என வேதனையுடன் கூறினார். இதுதொடர்பாக நமது நிருபர், அந்த அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரித்தபோது, ‘‘எங்கும் நடக்கக்கூடிய விஷயம்தான் இது. இதைப் பொருட்படுத்த வேண்டாம்’’ என தான் வாங்கும் கையூட்டு தப்பில்லை என்ற வகையில் அலுவலர்கள் பேசினர்.லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ஆன்லைன் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டாலும், லஞ்சம் வாங்கும் முறை குறைந்தபாடில்லை என்பதுதான் உண்மை.

Tags : Bribery , Amma cement,Sensationalized by viral video
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...