உள்ளூரில் உள்ள நீரை சேமிக்க முடியாமல் இஸ்ரேல் போவேன் என்பது வேடிக்கை மிகுந்த வினோதம் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் முதல்வர் உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக இஸ்ரேல் போகிறேன் என்பது வேடிக்கை மிகுந்த வினோதம் என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்குச் செல்கிறேன் என்று வெளிநாடுகளில் இரண்டு வாரச் சுற்றுலா முடித்து, சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் பேட்டியளித்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  கொள்ளிடம் ஆற்றிலிருந்து கடலில் கலந்து வீணாகும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் பற்றி கவலைப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது. கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூருக்கு வந்த காவிரி நீர், இன்னும் காவிரி டெல்டாவில் பல இடங்களில் கடைமடைக்குப் போய்ச் சேரவில்லை. திமுக ஆட்சியில் முதன்முதலாக செயல்படுத்தப்பட்ட காவிரி கால்வாய் தூர்வாரும் திட்டத்தையும் இந்த அ.தி.மு.க அரசு கைவிட்டு - கமிஷன் அடிப்பதற்காக மட்டுமே தூர்வாருகிறோம் என்ற பெயரில் நிதி ஒதுக்கி - ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆங்காங்கே கட்டிங் அடிக்க விட்டுள்ளார்கள். கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் கடலில் வீணாகப் போய் கலந்தது. இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது.

வேளாண்மைக்கும், குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் - இப்படி பயனற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா இருந்த போது கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் 480 கோடி ரூபாயில் கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேலாகியும், பல அறிவிப்புகளுக்கு நேர்ந்த கதி அதற்கும் ஏற்பட்டு, தடுப்பணைகள் கட்டப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றில் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு ஓரிடத்தில் அக்கம் பக்கம் இருக்கும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு வராத வகையில் தடுப்பணைகள் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. அந்தத் தொழில்நுட்பங்கள் அறிந்த பொறியாளர்கள் தமிழகப் பொதுப்பணித்துறையில் இருக்கிறார்கள். ஆனால் அதுபற்றியோ, கடலில் கலக்கும் காவிரி நீரை உரிய வகையில், வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றுவதிலோ எடப்பாடி பழனிசாமிக்கு அக்கறையுமில்லை, ஆர்வமும் இல்லை.

நானும் ஒரு விவசாயி என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லிக் கொண்டே விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை படுகுழியில் தள்ளி - மண்ணைப் போட்டு மூடுவதிலேயே முதலமைச்சர் கவனமுடன் செயல்படுகிறார்.குடிமராமத்துப் பணிகள் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் கமிஷன் அடிக்கும் பணியாக நடைபெற்று வருகிறது. அதற்கு உடன்படாத பொறியாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இந்த லட்சணத்தில் நீர் சிக்கனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதைப் பார்த்து, பொதுப்பணித்துறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல - பொதுமக்களும் எள்ளி நகையாடுகிறார்கள். உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் - கடலில் கலக்க அனுமதித்து விட்டு, உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக இஸ்ரேல் போகிறேன் என்பது வேடிக்கை மிகுந்த வினோதமாக இருக்கிறது. ஆதலால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது விரைந்து நிறைவேற்றிட எடப்பாடி பழனிசாமி முன்வந்திட வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Israel ,MK Stalin , Israel, go without saving local water,MK Stalin
× RELATED இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி அமைக்க...