×

விடைத்தாள் திருத்துவதில் மெத்தனம் 1000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

சென்னை:  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்துவதில்  குளறுபடிகள் செய்த 1000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 17பி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான  பொதுத் தேர்வு நடந்தது. 70 ஆயிரம் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்  ஏப்ரல் மாத இறுதிவரை  விடைத்தாள்களை திருத்தி முடித்தனர். மே மாதம் தேர்வு   முடிவுகள் வெளியானது. சில மாணவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மதிப்பெண்  கிடைக்கவில்லை. இதனால் 5000 மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர்.இவர்களின் விடைத்தாள்கள் வேறு ஆசிரியர்கள் மூலம் திருத்தப்பட்டன. 1500  மாணவ மாணவரின் மதிப்பெண்களில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன. வெறும் 8  மதிப்பெண்கள் பெற்றிருந்த ஒரு மாணவருக்கு விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு   பிறகு 80 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. மற்ற மாணவர்களுக்கு 50 மதிப்பெண்கள்  வரை வித்தியாசம் வந்துள்ளது. 30 சதவீத மாணவர்களுக்கு மதிப்பெண்களில்  மாற்றம் வந்துள்ளது.

இதனால் மேற்கண்ட 1500 மாணவர்களின்  விடைத்தாள்களை யார்  திருத்தினார்கள் என்ற விவரங்களை தேர்வுத்துறை சேகரித்தது. அதில் 1000  முதுநிலை பட்டதாரிகள் சிக்கினர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு  தேர்வுத்துறை இயக்குநர்  பரிந்துரை செய்தார். இதன் பேரில் மேற்கண்ட ஆசிரியர்களுக்கு ‘17பி’ நோட்டீசை  பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது. இதற்கு தகுந்த விளக்கம்  அளிக்காவிட்டால், அந்த ஆசிரியர்களின் ஊதிய ஊக்கத்தொகை, பதவி  உயர்வு ஆகியவை  பாதிக்கப்படும். இதுபோன்ற  குளறுபடிகளை விடைத்தாள் திருத்தும் மையத்தின்  தலைமை அதிகாரிகள் தான் சரிபார்க்க வேண்டும். ஆனால் விதிகள் எல்லாம்  காற்றில் பறந்துவிடப்பட்டுள்ளது என்று கல்வியாளர்கள்  கூறுகின்றனர்.

ஆசிரியர்களுக்கு அழுத்தமா?
விடைத்தாள் திருத்தும்போது காலை மாலை வேளைகளில் தலா 10 விடைத்தாள்கள் தான் திருத்த கொடுப்பார்கள், ஆனால் இந்த ஆண்டு 24 விடைத்தாள்கள் கொடுத்து திருத்த வைத்தனர் அதனால்தான் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்பட்டன  என்கின்றனர் ஆசிரியர்கள். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் விசாரணை நடத்துவதும், பின்னர் 17பி நோட்டீஸ் கொடுப்பதும் பள்ளிக் கல்வித்துறையின் வழக்கமாக  உள்ளது. ஆனால் அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற  கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

Tags : Teachers , Tenth Class, Plus 2 Answer Sheet, Teachers, Notice
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...