×

காட்பாடியில் விதி மீறியதால் நடந்த வேதனை: ஆட்டோவில் தவறி விழுந்த பள்ளி மாணவி பரிதாப பலி

வேலூர்: காட்பாடி அருகே ஆட்டோவில் டிரைவர் சீட் அருகே அமர்ந்து பயணம் செய்த பள்ளி மாணவி தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். காட்பாடி அடுத்த கீழ்வடுகன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது மகள் மதுலேகா(12). வடுகன்குட்டை ரைஸ்மில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மாலையில் பழைய காட்பாடி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் ஆட்டோவில் வீட்டிற்கு வந்தார். அதிகளவு பயணிகள் இருந்ததால் டிரைவர் சீட் அருகில் அமர்ந்தபடி மதுலேகா பயணித்துள்ளார். ஒரு வளைவில் ஆட்டோ நிலைதடுமாறியதால் மதுலேகா தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கு செல்ல போதுமான போக்குவரத்து வசதி இல்லாதால் அதிகளவில் மாணவ, மாணவிகள் ஆட்டோவில் பயணம் செய்துவருகின்றனர். இதை பயன்படுத்தி கொண்டு ஆட்டோ டிரைவர்கள் மாணவ, மாணவிகளை மூட்டைகளை அடுக்கி கொண்டு செல்வது போல் அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்கின்றனர். டிரைவர் சீட் மற்றும் பின்பகுதியில் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் ஆபத்தான முறையில் ஏற்றிச்செல்லும் அவலம் உள்ளது. இதில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை. மேலும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பது இல்லை. இதுபோன்ற அலட்சியத்தால் மாணவி உயிரிழந்துள்ளார். எனவே இனி இதுபோன்ற சோக சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Schoolgirl
× RELATED தருமபுரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை!