×

ஆறுமுகநேரி அருகே தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் கொற்கை மன்னன் கட்டிடங்கள்

ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி அருகே தாமிரபரணி ஆறு வறண்டதால் கொற்கை மன்னன் காலத்து கட்டிடங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன. இதனை மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் உற்பத்தியாகி இரு மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வளம் சேர்ப்பது தாமிரபரணி ஆறு. பொருநை நதி என்ற பெயரும் இதற்கு உண்டு. வற்றாத ஜீவநதி என பெயர் பெற்ற தாமிரபரணி ஆறு, கடுமையான கோடை காலங்களில் மட்டும் சில இடங்களில் வற்றுமே தவிர எப்படியும் ஆற்றின் போக்கு இருந்துகொண்ேட இருக்கும். தாமிரபரணிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கடந்த ஆண்டு ஒரு மாதத்திற்கு மேலாக புஷ்கர விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் செல்வதால் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தபோதிலும் சில இடத்தில் தேவை இல்லாமல் தடுப்பணை கட்டியதால் ஆறு வற்றும் நிலைக்கு வந்து விட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் மற்றும் உமரிக்காட்டிற்கு இடையில் 3 ஆண்டுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் கோடை காலங்களில் அந்த அணையில் நீர் தேங்கி, நிலத்தடிநீர் உயர்ந்து விவசாயத்தோடு, மக்கள் தேவையை பூர்த்தி செய்தது. உமரிக்காட்டிற்கும் கிழக்கே தாமிரபரணி ஆறு கலக்கும் புன்னைக்காயல் பகுதியில் உள்ள கடல் நீர் முன்னோக்கி வந்து உமரிக்காடு வரைக்கு வரும், இதனால் எந்த காலத்திலும் ஆற்றில் தண்ணீர் குறைவதில்லை. ஆத்தூர், முக்காணி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் நடந்தும், வாகனங்களில் வந்தும் ஆனந்தமாக குளித்து செல்வார்கள். மேலும் இந்த வழியாக திருச்செந்தூர் கோயில் மற்றும் பிற இடங்களுக்கு ஆன்மீக பயணம் செல்பவர்கள், தாமிரபரணி தண்ணீரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி குளித்து செல்வது வழக்கம்.

அப்படிபட்ட தாமிரபரணிக்கு இப்போது என்னநேர்ந்தது? ஆத்தூர், முக்காணி ஆற்று பாலத்திற்கு கிழக்கே ஒரு ஆண்டுக்கு முன் மேலும் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் ஒரு புறம் பொதுமக்கள் பயனடைந்தபோதிலும், உமரிக்காடு வரை சென்ற கடல் நீர் தற்போது கீழ் பகுதி தடுப்பணையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நூற்றாண்டுகாலமாக வற்றா ஜீவநதி என்ற பெயர் பெற்ற ஆறு உமரிக்காட்டிற்கும், கிழக்கே உள்ள தடுப்பணைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடல் நீர் வரமுடியாமல் ஆறு வறண்டு விட்டது. கடந்த ஒரு மாதமாக இந்த நிலை நீடிக்கிறது. இதனால் ஆற்றில் குளித்தவர்கள் பாடுதான் படு திண்டாட்டமாகிவிட்டது. ஆறு வறண்டபோதிலும் அதிலும் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அப்பகுதிக்கு சென்ற சமூக ஆர்வலர் ஆத்தூர் நெடுஞ்செழியபாண்டியன்(56) ஆற்றில் பழைய கட்டிடங்கள் புதைந்து கிடப்பதை பார்த்தார். கற்கல் மற்றும் செங்கலால் அவை கட்டப்பட்டுள்ளன. சுமார் 200 அடி அகலத்திற்கு கட்டிடம் இருந்தது. அவைகள் சுண்ணாம்பால் கட்டப்பட்டிருப்பதால் கட்டிடம் மிகவும் உறுதியாக உள்ளது.

இதுகுறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கட்டிடங்கள் கொற்கை மன்னன் காலத்தில் கட்டப்பட்டது என தெரிகிறது. யார் இந்த கொற்கை மன்னன்? 2500 ஆண்டுகளுக்கு முன் அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் மதுரையை பாண்டிய நெடுஞ்செழிய மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். திறம்பட ஆட்சி புரிந்த அவனது ஆட்சியில் தான் மன்னன் கள்வன் என கண்ணகி குற்றச்சாட்டியதால் மன்னன் உயிர் துறந்தான். அதன் வரலாறு அனைவருக்கும் தெரியும். அந்த மன்னன் உடன்பிறந்த சகோதரன்தான் வெற்றிவேல் நெடுஞ்செழியன். அண்ணன் மதுரையை ஆட்சி செய்ய, தம்பி வெற்றிவேல் நெடுஞ்செழியன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கையை ஆண்டு வந்தான். இவன் காலத்தில் கடல் வணிகம் கொடிகட்டி பறந்துள்ளது. இதற்காக கொற்கையில் துறைமுகம் அமைத்து வணிகத்தில் ஈடுபட்டான். அவன் ஆட்சியின்போது இப்போது புன்னைக்காயலோடு முடிவுறும் கடல் அப்போது உமரிக்காடு வரை கடல் பரபரப்பு இருந்துள்ளது.

அவன்காலத்தில் இப்பகுதியில் வணிகம் செய்ய வசதியாக கட்டிடங்கள், அல்லது துறைமுகத்திற்கு நுழைவு வாயிலாகவோ ஆற்றில் கட்டிடடங்கள் கட்டியிருக்கலாம். மேலும் மன்னன் தங்கி செல்வதற்கு வசதியாக இந்த பகுதியில் அரண்மனை கூட கட்டியிருக்கலாம் என தெரிகிறது. அண்ணன் உயிர் துறந்த செய்தியறிந்து துடித்துப்போன வெற்றிவேல் நெடுஞ்செழியன் கொற்கை ஆட்சியை தளபதிகளுடன் ஒப்படைத்து விட்டு அவன் மதுரைக்கு சென்று ஆட்சி பொறுப்பை ஏற்றான் என்பது வரலாற்று உண்மைகள். 2000 ஆண்டுக்கு முன் கடலின் எல்கை உமரிக்காடு வரை நீண்டுள்ளதும். இப்போது ஓடும் தாமிரபரணி ஆறு உமரிக்காட்டிற்கு மேற்கே கடலில் கலந்திருக்ககூடும் என்றும் தெரிகிறது. தற்போது ஆற்றில் தெரியும் கட்டிடங்கள், கொற்கை மன்னன் காலத்தில் உள்ளதுதான் என சமூக ஆர்வலர் நெடுஞ்செழியபாண்டியன், மற்றும் ஆறுமுகநேரி தமிழறிஞர் தவசிமுத்து என்பவரும் கொற்றை மன்னன் காலத்து கட்டிடங்களாகத்தான் இருக்க கூடும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆற்றில் பழமையான கட்டிடங்கள் தென்படும் செய்தி சுற்று வட்டாரங்களில் பரவியதோடு வாட்ஸ் அப் மூலமும் வைரலாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகிறார்கள்.

அகழ்வாராய்ச்சி செய்யப்படுமா?

தாமிரபரணி ஆற்றங்கரையில் பல அரிய பொக்கிஷங்கள் இருப்பது தற்போது வெளிவரத்தொடங்கி உள்ளன. திருவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் பழங்காலத்து முதுமக்கள் தாழி, பண்டைய காலங்களில் மக்கள் பயன்படுத்திய அரிய ஆயுதங்கள், மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இதனால் இங்கு அரசின் ஏற்பாட்டில் அகழ்வாராய்ச்சி நடந்து வருவதோடு. ஆதிச்சநல்லூர் பெயர் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பரவியிருக்கிறது. இதுபோல் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள கோயில்கள் பாழடைந்து கிடப்பதும். அவற்றில் ஒரு சில கோயில் தற்போது வரை பராமரிக்கப்பட்டு வருவதும் பக்தர்கள் வழிபட்டு வருவதும், தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகை மலையில் அகத்தியர் அருள்பாலித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இத்தனை பல்வேறு சிறப்புகள் பெற்ற தாமிரபரணி ஆற்றில்தான் இப்போது கொற்கை மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படும் கட்டிடங்கள் தெரிந்துள்ளன. இது தாமிரபரணிக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும். ஆதிச்சநல்லூர், தமிழ்நாட்டில் கீழடி கிராமத்தில் இதுபோன்ற புராண கட்டிடங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு அங்கும் அகழ்வாராய்ச்சி நடக்கிறது. அதே போன்று கொற்கை மன்னன் கட்டிடங்கள் என கூறப்படும் தாமிரபரணியில் இதுபோன்று ஆய்வுகள் செய்தால் மேலும் பல அரிய தகவல்கள் வெளிவரக்கூடும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து.

Tags : Korakai ,Arumuganeri ,Thiruparani River ,buildings , Thamirabarani
× RELATED ஆட்டோ கவிழ்ந்து 4பெண்கள் காயம்