×

கொலிஜியத்தின் முடிவை தலைமை நீதிபதி தஹில் ரமாணி மதிக்க வேண்டும்: இந்திய பார் கவுன்சில் திட்டவட்டம்

புதுடெல்லி: கொலிஜியத்தின் முடிவை தலைமை நீதிபதி தஹில் ரமணி மதிக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் குழு கடந்த வாரம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்தியாவின் மிகப்பெரிய உயர்நீதிமன்றமான 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து இந்தியாவின் மிகச்சிறிய நீதிமன்றமான 3 நீதிபதிகள் கொண்ட மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியை மாற்ற பரிந்துரை செய்திருப்பது நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை நீதிபதியை மேகாலயாவுக்கு மாற்றம் செய்ததற்கு வக்கீல் சங்கங்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தலைமை நீதிபதி தஹில் ரமானி தன்னை மாற்றம் செய்யும் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தனது தலைமை நீதிபதி பதவியை கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். அந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார். அவர்கள் தொடர்ந்து பணிக்கு வராமல் இருப்பதால், அவரது நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட வழக்குகள் வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.

இந்நிலையில், கொலிஜியத்தின் முடிவை தலைமை நீதிபதி தஹில் ரமணி மதிக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ராஜினாமா கடிதம் அளித்தது கொலிஜியத்தின் முடிவை அவமதிக்கும் செயலாகும் என தெரிவித்துள்ள பார் கவுன்சில், தஹில் ரமாணி இடமாற்றத்திற்கும் குஜராத் பில்கிஸ் வழக்கிற்கும் தொடர்புபடுத்தி பரப்பப்படும் தகவல் தவறு என தெரிவித்துள்ளது. மேலும் மும்பை, சென்னை உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றியபோது ஏற்றது போல் மேகாலயாவுக்கு மாற்றியதையும் ஏற்க வேண்டும் என்றும், தஹில் ரமாணி மற்றும் அஜய்குமார் மிட்டல் இடமாறுதல் குறித்த முடிவுக்கு விரைந்து ஒப்புதல் பெற நடவடிக்கை தேவை, எனவும் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.


Tags : Tahil Ramani ,Collegium: Indian Bar Council , Collegium, Madras High Court, Tahil Ramani, Indian Bar Council
× RELATED சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள்...