×

ஜம்மு-காஷ்மீரின் சோபூரில் நடைபெற்ற என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மிக முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

சோபூர்: ஜம்மு-காஷ்மீரின் சோபூரில் நடைபெற்ற என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மிக முக்கிய பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், சோபூரின் டேங்கர்பூரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில், அஸ்மான் ஜான் என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த மூவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், என்எஸ்ஏ தலைவர் அஜித் டோவலின் உத்தரவின் பேரில் அஸ்மான் ஜான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மிக முக்கிய பயங்கரவாதி ஆசிப், தற்போது என்வுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் மாநில போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று காலை காரில் சென்றுகொண்டிருந்த ஆசிப்பை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் காரை நிறுத்தாமல் சென்றதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பு படையினர் மீது ஆசிப் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதையடுத்து, தக்க பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர் ஆசிப்பை சுட்டுக்கொலை செய்துள்ளனர். இந்நிலையில், இந்த என்கவுன்டரின் போது 2 போலீசாரும் படுகாயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோபூரில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற அதிரடி நடவடிக்கையின் அடிப்படையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று முக்கிய பயங்கரவாதி ஆசிப் கொல்லப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Lashkar-e-Taiba's ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, Sopore, encounter, Lashkar-e-Taiba, terrorist, killed
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...