×

மெட்ரோ ரயில், ஓலா, ஊபர் தான் கார்கள் விற்பனை சரிய காரணம்

* தங்கம் விலையை கட்டுப்படுத்த முடியாது
* மத்திய நிதி அமைச்சர் அதிரடி விளக்கம்

சென்னை: மெட்ரோ ரயில் மற்றும்   ஊபர், ஓலா போன்ற வாடகை கார்களை பயன்படுத்துவதால் புதிதாக கார் வாங்க முதலீடு செய்யவில்லை. அதனால்தான் இந்தியாவில் வாகன விற்பனை சரிந்து, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கம் அளித்துள்ளார்.பாஜ அரசு பதவி ஏற்று 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, நாட்டின் வளர்ச்சிக்கு  மத்திய அரசின் முயற்சிகள் மற்றும் உறுதியான செயல்பாடுகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தி முடங்கி போய் இருப்பதாக கூறப்படுகிறது. மோட்டார் வாகன உற்பத்தி துறை சார்ந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை  நடத்தி, அவர்களின் கருத்துகளை கேட்டபின்னர், சில அறிவிப்புகள்   வெளியிடப்படும்.  மின்சார வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு  கட்டுப்படியான விலையில் கிடைக்கும் வகையில் அதன் மீதான ஜிஎஸ்டி வரியை  நீக்கி இருக்கிறோம். அதேபோல், பயன்பாட்டு கட்டணத்தையும் நீக்கியுள்ளோம். பிஎஸ்-6   வாகனத்துக்கு நகர்வு, பதிவு கட்டணம் உயர்வு, பணம் வைத்திருப்பவர்கள்  புதிதாக கார் வாங்கி முதலீடு செய்வதை விரும்பாமல் மெட்ரோ ரெயில் மற்றும்  ஊபர், ஓலா போன்ற வாடகை கார்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு  காரணங்களால் இந்த  சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ஜிஎஸ்டி கூட்டம் வருகிற 20ம் தேதி கூடுகிறது. வாகன  உற்பத்தி துறை சார்ந்தவர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் ஜிஎஸ்டி  கவுன்சில் முடிவு எடுக்கும்.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தில்  ஏற்றம் இறக்கம் என்பது வழக்கமான ஒன்றுதான். அடுத்த காலாண்டு வளர்ச்சியை  உயர்த்த முழு கவனம் செலுத்தி வருகிறோம். சிக்கலான நேரங்களில் ரிசர்வ்  வங்கியிடம் இருந்து  நிதியை பெறுவதில் எந்த தவறும் இல்லை. இதனால் எந்த  பின்னடைவும் ஏற்படாது. எல்லா ஆட்சிகளிலும் இதுபோன்று பணம் பெறப்பட்டு  இருக்கிறது.தங்கத்துக்கான மூலப்பொருள் இந்தியாவில் இல்லை. இறக்குமதியை நம்பிதான்  இருக்கிறோம். இறக்குமதி, டாலர் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை  ஆகியவற்றின் அடிப்படையில் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுபோன்ற   பல்வேறு காரணங்களால் நிர்ணயம் செய்யப்படும் தங்கம் விலையை, மத்திய அரசு  கட்டுப்படுத்துவது எளிது அல்ல. இந்தியாவை  5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றும் ஒரு அங்கம் தான்,  பொதுத்துறை வங்கிகளை இணைப்பது ஆகும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம்  கோடி மதிப்பிலான  அடிப்படை உள்கட்டமைப்பு வசதி  திட்டங்களை கொண்டு வருவதற்கு  ஒரு சிறப்பு படை  அமைக்கப்பட்டு இருக்கிறது. சந்திரயான்-2  திட்டத்தில் 99.9  சதவீதம் வெற்றி பெற்று இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Ola ,Uber , Metro Rail, Ola, Uber,cars slide
× RELATED மெட்ரோ ரயில் முதல் வகுப்பு பெட்டிகள்...