×

ரயில்வே சங்க நிர்வாகி கொலைக்கு பழிக்குப்பழி கால்டாக்ஸி ஓட்டுநர் வெட்டிக்கொலை

* 5 பேர் தலைமறைவு * வில்லிவாக்கத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை வில்லிவாக்கம் பாட்டையா தெருவில் வசித்து வந்தவர் புதியவன் (51). இவர் தெற்கு ரயில்வே யூனியன் ஒன்றில் பொதுச் செயலாளராக இருந்தார். இவரிடம் வில்லிவாக்கம் பலராமபுரம், அறிஞர் அண்ணா தெருவில் வசித்து  வந்த பாஸ்கர் (42) கார் டிரைவராக இருந்தார். கடந்த 2018ம் ஆண்டு பாஸ்கர், அவரது தம்பி ஜெகதீசுக்கு புதியவனிடம் ரயில்வேயில் வேலை கேட்டுள்ளார். அதற்காக 5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் புதியவன் வேலை வாங்கித்தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் அவரது நண்பர் ஆனந்த் என்பவருடன் சேர்ந்து கடந்த 2018 பிப்ரவரி மாதம் 9ம் தேதி வேலைக்காக கொடுத்த பணத்தை கேட்டபோது ஏற்பட்ட தகராறில்  புதியவன் கொலை செய்யப்பட்டார். பின்னர் ஐசிஎப் போலீசார் கொலை வழக்கில் பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பாஸ்கர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.இதற்கிடையே, கால்டாக்ஸி ஓட்டுநராக பாஸ்கர், புதியவனின் அக்கா மகன் சுபாஷ் மற்றும் சுகன் ஆகியோரிடம், ‘‘என்னுடைய பணம் 5 லட்சம் வரவில்லை என்றால் உங்க அக்கா மற்றும் இருவரையும் கொலை செய்து விடுவேன்’’ என்று  மிரட்டியதாக பாஸ்கர் மீது மறுபடியும் புதியவன் மனைவி ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஐசிஎப் போலீசார் மறுபடியும் பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.சிறையில் இருந்து வெளியே வந்த பாஸ்கர், கால்டாக்ஸி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சுமார் 12.30 மணி அளவில் வேலை முடிந்து பாஸ்கர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். வில்லிவாக்கம் பலராமபுரம் 4வது  தெரு வழியே நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த 5 பேர் கும்பல், பாஸ்கரின் முகத்தில் ஸ்பிரே அடித்ததில் அவர் நிலைகுலைந்து போனார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்த கும்பல், பாஸ்கரை சரமாரியாக வெட்டியது. இதில் அவரின் முகம் மற்றும் இரு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாஸ்கர் உயிரிழந்தார். அவரை  வெட்டிக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் போலீசார் பாஸ்கரின் உடலைக் கைப்பற்றி கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பாஸ்கரை கொலை செய்தவர்களில் இருவர்,  கடந்த ஆண்டு பாஸ்கரால் கொலை செய்யப்பட்ட ரயில்வே சங்க நிர்வாகி புதியவனின் அக்கா மகன்களான சூரப்பேட்டையைச் சேர்ந்த சுபாஷ் மற்றும் சுகன் என்று தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இதையடுத்து வில்லிவாக்கம் போலீசார் ஐபிசி பிரிவு 341, 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து  தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக புதியவன் மனைவியை காவல் நிலையம் அழைத்து விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.


Tags : Revenge ,railway union executive murder , Railway, union , murder, Caltaxi driving ,cutoff
× RELATED இன்டர்நெட் ஆபாச பழிவாங்கலில் இருந்து...