×

குடிமராமத்து திட்டத்தில் தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் ஏரிகளை புனரமைக்க முடிவு

* 5 ஆண்டுக்கும் மேலாக சீரமைக்காதவை தேர்வு  * தமிழக அரசு அறிவுரை

சென்னை: குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் ஏரிகளை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாத ஏரிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று  அதிகாரிகளுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுக்கும் விதமாக குடிமராமத்து திட்டம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வரத்து வாய்க்கால்கள், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் கலிங்குகள் ஆகியவற்றின்  பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. இந்த பணிகள் கான்ட்ராக்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால், அதன்பிறகு, விவசாய சங்கங்கள்/ ஆயக்கட்டுதாரரர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று  தமிழக அரசு முடிவு செய்தது.  தொடர்ந்து விவசாயிகள் சங்கங்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  

இந்நிலையில், கடந்த 2019-20ம் நிதியாண்டில் 29 மாவட்டங்களில் 1829 ஏரிகளில் பணிகளை மேற்கொள்ள கடந்த ஜூன் மாதம் ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து 600க்கும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தற்போது வரை நடந்து  வருகிறது.
மேலும், 2020-21ம் நிதியாண்டில் 5 ஆயிரம் ஏரிகளை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் அறிக்கை  ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக புனரமைக்கப்படாத ஏரிகளை கண்டறிந்து அங்கு மேற்கொள்ள வேண்டிய புனரமைப்பு பணிகள் தொடர்பாக திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். அந்த அறிக்கை  கிடைத்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து புனரமைக்கபடாமல் உள்ள ஏரிகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : lakes ,Tamil Nadu , Citizenship ,throughout ,Tamil Nadu,Thousand Lakes
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!