×

இன்று ஓணம் பண்டிகை அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிட, திருமால் வாமன அவதாரம் எடுத்தார். பாதாள உலகிற்கு செல்லும் முன்பு, ஆண்டுக்கு ஒருமுறை தன்னுடைய மக்களை காண வேண்டும் என்ற மகாபலி சக்கரவர்த்தியின் வேண்டுதலை திருமால் ஏற்று அருள் புரிந்தார். அதன்படி, மகாபலி சக்கரவர்த்தி மக்களை காணவரும் தினமே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை நன்னாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றி மக்கள் அனைவரும் சாதி, மத பேதங்களை களைந்து, ஒற்றுமையாக இன்புற்று வாழ்ந்திட வேண் டும் என்று வாழ்த்துகிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்(அதிமுக ஒருங்கிணைப்பாளர்):திருவோணம் பண்டிகையின் போது,  ஏழை எளிய மக்களுக்கு உணவும், உடையும் வழங்கி, ஈகைத் தன்மையின் சிறப்பினை உலகிற்கு எடுத்துரைப்பார்கள். இந்த இனிய திருநாளில், நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம். கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): தமிழகத்தில் எவ்வித பேதமின்றி மலையாள மொழி பேசுகிற கேரள மாநில மக்கள் தமிழக மக்களோடு சகோதர உணர்வுடன் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்தும், தொழில் புரிந்து வருவதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். தமிழகத்தில் வாழ்கிற கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புமணி(பாமக இளைஞரணி தலைவர்): மன்னன் மகாபலியின் வரலாறு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி, கொடை வள்ளலாகவும் விளங்கினார். பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): உலகெங்கிலும் வாழும் மலையாள மொழி  பேசும் மக்கள் அனைவரும் மகாபலி மன்னரின் ஆசியோடு வாழ்வில் மகிழ்வுடன்,  நலமுடன், வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். டிடிவி தினகரன்(அமமுக பொதுச் செயலாளர்): கேரள மக்களின் பண்பாட்டுப் பெருமையை மட்டுமல்லாமல், சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்துவதாக இப்பண்டிகை அமைந்திருப்பது சிறப்புக்குரியது. அத்தகைய திருவோணம் திருநாள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் நன்மைகளையும் கொண்டுவந்து சேர்க்கட்டும். சரத்குமார்(அஇசமக தலைவர்): தமிழ்  இலக்கியங் களிலும், தேவாரம், திவ்யப்பிரபந்தம் உள்ளிட்ட சமய  இலக்கியங்களிலும் ஓணம் பண்டிகை குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன என்பது  தமிழர்களோடு, மலையாள மொழி பேசும் மக்களது நீண்டநாள் நல்லுறவை  எடுத்துரைப்பதாக இருக்கிறது. சிறப்புமிக்க ஓணம் திருநாளில் கேரள மக்கள்,  உலகெங்கும் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் அன்பும், மகிழ்ச்சியும்  கலந்த ஓணம் நல்வாழ்த்துகள்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: தெய்வத்தின் பூமியான கேரளத்தின் அதி முக்கிய விழாவான ஓணம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அறம் பிறழா ஆட்சி நடத்திய மாமன்னன் மகாபலிச் சக்கரவர்த்தியின் சொல் தவறாமையை சோதிக்க மூவடி நிலம் கேட்டு மண்ணையும், விண்ணையும், ஈரடியாக்கி மூன்றாம் அடிக்கு தன் சிரம் தந்து சொல் காத்த பெருமைக்கு இறவா தன்மை கொடுக்க பகவான் மகாவிஷ்ணுவால் அளிக்கப் பெற்ற வரமே திருஓணப் பண்டிகை. இந்த அற்புத திருநாளில் சத்தியம் தவறா மகாபலிச் சக்கரவர்த்தியையும், வாமனனாக வந்து அருளிய பகவான் மகாவிஷ்ணுவையும் வணங்குவோம். பாரிவேந்தர்(ஐஜேகே தலைவர்), வி.எம்.எஸ்.முஸ்தபா(தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்), கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



Tags : leaders ,Onam ,festival , Onam festival, political leaders, greetings
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...