×

கால்வாய் அடைப்பை சீரமைப்பதில் அலட்சியம் கழிவுநீர் குளமாக மாறும் தெருக்கள் : தொற்றுநோய் பீதியில் மக்கள்

சென்னை: சென்னையில் கால்வாய் அடைப்புகளை சரிசெய்வதில் குடிநீர் வாரியம் அலட்சியம் காட்டி வருவதால் கழிவுநீர் தேங்கி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாவிட்டால் தண்ணீர் பிரச்னை, மழை பெய்தால் கழிவுநீர் தேங்கும் பிரச்னை என்பது சென்னை மக்களின் நிரந்தர பிரச்னையாக உள்ளது. தற்போது, அவ்வப்போது மழை பெய்து வருவதால் கால்வாய் அடைப்புகளை சீரமைக்க சென்னை குடிநீர் வாரியம் முழுவீச்சில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் அலட்சியம் காட்டியதன் விளைவு சிறிதளவு பெய்த மழைக்கே தண்ணீர் வெளியேற முடியாமல் கழிவுநீருடன் கலந்து ஆங்காங்கே தெருக்களில் தேங்கியுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். சென்னையில் பல தெருக்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கடும் துர்வாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 3,530 கிலோ மீட்டர் தூரத்துக்கு கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து தினமும் சராசரியாக 520 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேறுகிறது.

சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தெருக்களில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்கள் தான் உள்ளன. இதன் அளவு சிறியதாக இருப்பதால் அழுத்தம் காரணமாக குழாய்களில் விரிசல் ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே கழிவுநீர் தேங்கும் பிரச்னைக்கு  நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும். ஆனால் தற்காலிக தீர்வுகளை மட்டுமே செய்து வரும் குடிநீர் வாரியம் அதிலும் ஆமை வேகத்தில் செயல்படுவதால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் கழிவுநீர் தேக்கத்தால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர். எனவே, குடிநீர் வாரியம் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : sewer streets ,epidemic ,panic , sewer pond, negligent , rebuilding the canal
× RELATED காரியாபட்டி அருகே பயங்கரம்: கல்குவாரி...