×

பாஜ அரசின் 100 நாள் ஆட்சியில் முதலீட்டாளர்களின் பணம் 12.5 லட்சம் கோடி போச்சு: பங்குச்சந்தையில் இருந்து ஓடும் வெளிநாட்டினர்

புதுடெல்லி: மத்தியில் பாஜ தலைமையிலான அரசின் 100 நாள் ஆட்சியில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 12.5 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு 2வது முறையாக பதவியேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த அரசு கடந்த மே 30ம் தேதி பதவியேற்ற போது, பிஎஸ்இ எனப்படும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மொத்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு  153.62 லட்சம் கோடியாக இருந்தது. இதுவே, நேற்றைய வர்த்தக முடிவில் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 141.15 லட்சம் கோடி. இதன் மூலம், கடந்த 100 நாளில் மட்டுமே முதலீட்டாளர்கள் 12.5 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.

கடந்த ஒரு மாதமாகவே பங்குச்சந்தையில் கடும் தடுமாற்றம் நிலவி வருகிறது. சென்செக்ஸ் புள்ளிகள் வரலாறு காணாத வீழ்ச்சியையும் சந்தித்து வருகின்றன. கடந்த 100 நாளில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2,357 புள்ளிகள், அதாவது 5.96 சதவீத சரிவை கண்டுள்ளது. நிப்டி 858 புள்ளிகள் சரிந்து 7.23 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. இதற்கு காரணம், பொருளாதார மந்த நிலை, வெளியேறும் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாயில் சுணக்கம் ஆகியவை என நிபுணர்கள் கூறுகின்றனர். இதோடு, வெளிநாடு முதலீட்டாளர்கள் பலரும் தங்கள் பங்குகளை விற்றதும் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வெளிநாடு முதலீட்டாளர்கள் மட்டுமே ₹28,260 கோடிக்கான பங்குகளை விற்று வெளியேறி உள்ளனர். இதற்கு காரணம், கடந்த 2018 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்பட்டதே.

இந்த வரியால்தான் வெளிநாடு முதலீட்டாளர்  இந்திய பங்குகளை விற்பதில் முனைப்பு காட்டத் தொடங்கினர். இந்த வரி விதிப்பு சமீபத்தில் திரும்ப பெறப்பட்டாலும், அதற்குள் பெரும்பாலானோர் பங்குகளை விற்றுள்ளனர். இதே போல், அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போரால் உலோக நிறுவன பங்குகள் 20 சதவீதம் சரிவை கண்டுள்ளது. ஏற்கனவே, ஆட்டோமொபைல் துறை தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நிறுவன பங்குகள் 13.48 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளன. இதே போல், தனியார் வங்கிகள், மீடியா உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவன பங்குகளும் 10-14 சதவீத சரிவையே கண்டுள்ளன.  பொருளாதார மந்தநிலையை சீர் செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும், பங்குச் சந்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக அடி வாங்கியதுஅரசு வங்கிகளின் பங்கு
வராக்கடன் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுத்துறை வங்கிகள் வரலாறு காணாத நஷ்டத்தை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதன் தாக்கம், வங்கித்துறை பங்குகளிலும் எதிரொலித்தது. அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிகளின் பங்கு 26 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும், தனியார் வங்கிகளின் பங்குகளை வாங்குவதிலும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

Tags : Investors ,government ,Bajaj , Baja government, 100 day rule, stock market, investors
× RELATED தொடர்ந்து 3-வது நாளாக இந்தியப்...