×

ஆன்லைன் விளம்பர ஏகபோகம் கூகுள் நிறுவனத்துக்கு புது சிக்கல் : அமெரிக்காவில் விசாரணை நடத்த முடிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆன்லைன் விளம்பரத்தில் கூகுளின் ஏகபோக உரிமையை எதிர்த்து 50 மாகாண அரசுகளின் தலைமை வக்கீல்கள் விசாரணை நடத்த இருப்பதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பொதுவாக இணையதளத்தில் நாம் ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்காகவோ அல்லது ஒரு பொருளைப் பற்றிய விவரங்கள் அறிவதற்காகவோ தேடி முடிந்ததும், உடனே குறிப்பிட்ட அந்த பொருட்களைப் பற்றி விளம்பரங்கள் திரும்ப திரும்ப கூகுள் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கும். இதன் மூலம் கூகுளுக்கு ஆன்லைன் விளம்பர வருவாய் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

கூகுளின் இந்த நடவடிக்கைக்கு தற்போது சிக்கல் வந்துள்ளது. ஆன்லைன் விளம்பரத்தில் கூகுள் நிறுவனம் ஏகபோக உரிமை கொண்டிருப்பதாக அமெரிக்காவின் 50 மாகாணங்களின் தலைமை அரசு வக்கீல்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக, டெக்சாஸ் மாகாண அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் தலைமையில் 50 தலைமை அரசு வக்கீல்கள் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் அளித்த பேட்டியில், ‘‘மக்களில் பலரும் இன்டர்நெட் இலவசம் என நினைக்கிறார்கள். ஆனால், அதன் மூலம் கூகுள் நிறுவனம் சுமார் ரூ.8 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதைப் பார்க்கும் போது, இன்டர்நெட் இலவசமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆன்லைன் விளம்பரத்தில் வாங்குவோர், விற்பவர், ஏலம் நடத்துவோர், யூ டியூப் வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்திலும் கூகுள் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது,’’ என்றார்.

நீதிபதிகளின் இந்த குற்றச்சாட்டை கூகுள் மறுத்துள்ளது. அமெரிக்க அரசின் சட்ட திட்டங்களை கூகுள் ஒருபோதும் மீறவில்லை என்றும் கூறி உள்ளது. முன்னதாக, கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் தகவல்களை முறையாக பாதுகாக்கிறதா என விசாரணை நடத்தப் போவதாக அரசு வக்கீல்கள் அறிவித்தனர். இதுபோல், அமெரிக்க நீதித்துறை தொடர்ந்து கூகுள், பேஸ்புக், அமேசான் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : US , Online advertising monopoly, new problem, Google
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...