×

உதவி பேராசிரியர் நியமன அறிவிப்பை எதிர்த்து வழக்கு

மதுரை: உதவி பேராசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி (இயற்பியல்), எம்பில் மற்றும் பிஎட் முடித்துள்ளேன். ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். உதவி பேராசிரியராக பணி புரிவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளது. தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள 2,340 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆக.28ல் வெளியிடப்பட்டது. உயர்கல்வித்துறை முதன்மை செயலரின் அரசாணைப்படி, ஆசிரியர் பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண், கல்வித்தகுதிக்கு 9 மதிப்பெண், நேர்முகத்தேர்வுக்கு 10 மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

மொத்தமுள்ள 34 மதிப்பெண்ணில் நேர்முகத்தேர்வுக்கு மட்டும் 29 சதவீத மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பணி நியமன முறைகளில் மொத்த மதிப்பெண்ணில் நேர்முகத் தேர்வுக்கு 15 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது பல வழக்குகளில் நீதிமன்றங்கள் கூறியுள்ளது. எனவே, நேர்முகத் தேர்வுக்கு 29 சதவீத மதிப்பெண் வழங்குவது சட்டவிரோதம். இது பாரபட்சம் காட்டுவதைப் போலாகும். எனவே, கடந்த ஆக.28ல் வெளியான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.

Tags : announcement ,Assistant Professor , Appointment of Assistant Professor, Case
× RELATED முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு...