×

3-வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனுக்கு தர்ம அடி: நடுரோட்டில் 2 மனைவிகள் விளாசல்

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் நேரு நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் மகன் அரங்கஅரவிந்த் தினேஷ்(26). இவர் ஈரோட்டை அடுத்த ராசிபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பேட்டர்ன் மேக்கராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்த ராஜசேகர் மகள் பிரியதர்ஷினிக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அரவிந்த் திருமணமான 15 நாளிலேயே தனது மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து பிரியதர்சினி திருப்பூரில் உள்ள தனது அப்பா வீட்டுக்கு சென்றுவிட்டார்.   இதையடுத்து, அரவிந்த்  கல்யாண வலைதளத்தில் மீண்டும் மணமகள் தேடியுள்ளார். கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்த ஐயப்பன் மகள் அனுப்பிரியா (23) என்பவரை கடந்த ஏப்ரல் 10ம் தேதி  இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அனுப்பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. அதை தெரிந்து திருமணம் செய்துள்ளார்.

முதல் மனைவி இருப்பதை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அனுப்ரியாவையும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால், அனுப்பிரியாவும் தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், அரவிந்த் மீண்டும் கல்யாண வலைத்தளத்தில் மணமகள் தேடியுள்ளார். இந்த தகவலை அறிந்த முதல் மனைவி பிரியதர்ஷினியும்,இரண்டாவது மனைவி அனுப்பிரியாவும் நேற்று முன்தினம் சூலூர் வந்து அரவிந்தனின் தந்தை சவுந்தர்ராஜனை அழைத்துக் கொண்டு அரவிந்த் பணியாற்றி வரும் தொழிற்சாலைக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து அங்கு சென்ற சூலூர் போலீசார் அரவிந்தையும், இரண்டு மனைவிகளையும் சூலூர் காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி விட்டு திரும்பினர். அப்போது கம்பெனியில் இருந்து வெளியே வந்த அரவிந்தை,  மனைவிகள் இருவரும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

நடுரோட்டில் அரவிந்துக்கு இரண்டு பெண்கள் தர்மஅடி கொடுப்பதை கண்டு அப்பகுதி மக்கள் திகைத்து நின்றனர். இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது. சம்பவ இடத்திற்கு சென்ற சூலூர் போலீசார் கல்யாண மன்னன் அரவிந்தை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்றனர். அங்கு விசாரணைக்கு பின்னர் போத்தனூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கை மாற்றினர். பெண் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Dharma ,Kalyana King ,wives , 3-marriage, wedding, King, 2 wives
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...