×

காங்கிரசில் இருந்து விலகினார் நடிகை ஊர்மிளா மடோன்கர்: கட்சியில் சேர்ந்த 6 மாதத்தில் முடிவு

மும்பை: மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு 2,41,431 வாக்குகள் பெற்றார். வடக்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரும் போட்டியிட மறுத்த நிலையில் அதில் ஊர்மிளா போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ.வின் கோபால்ஷெட்டி வெற்றி பெற்றார். சட்டப்பேரவை தேர்தலில் ஊர்மிளாவை மீண்டும் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட வைக்க திட்டமிட்டு வந்தது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன். மும்பை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை. அதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை. அதோடு மும்பை காங்கிரஸ் கட்சியினர் உயரிய நோக்கங்களுக்காக பாடுபடுவதைவிட்டு சின்ன, சின்ன பிரச்னைகளுக்காக சண்டையிட்டுக் கொள்கின்றனர். அதில் எனது பெயரை பயன்படுத்த பார்க்கின்றனர். இதற்கு எனது அரசியல் மற்றும் சமூக உணர்வுகள் இடம் கொடுக்கவில்லை.

கடந்த மே 16ம் தேதி மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தேவ்ராவிற்கு எழுதிய கடிதத்தில் சஞ்சய் நிரூபத்தின் ஆதரவாளர்கள் சந்தேஷ் கொன்விகர், புஷண் பாட்டீல் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்து இருந்தேன். இதுகுறித்து கட்சியில் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அதன் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போதுதான் முதல் முறையாக கட்சியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்தேன். நான் எழுதிய கடிதம் மீடியாவிற்கு கசிந்தது. இச்செயல் அப்பட்டமான துரோகமாக எனக்கு தெரிந்தது. மும்பை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் யாரும் கட்சியை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.Tags : Urmila Madonkar ,Congress , Congress and actress Urmila Madonkar
× RELATED காங்கிரஸ் கட்சிக்கும், சீன...