×

ஆயுள் இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் விக்ரம் லேண்டர் சிக்னலை மீட்கும் முயற்சிகள் தீவிரம்: இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு: விக்ரம் லேண்டரின் சிக்னலை மீட்கும் முயற்சி தொடர்கிறது. சந்திரயான்-2 திட்டத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சி கடந்த 7ம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்டது. நிலவின் தரையில் இருந்து 2.1 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டர் செங்குத்தாக தரையிறங்கிய போது திடீரென இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் தரை இறங்கியதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே, நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டரின் கேமரா, நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்ட இடத்திற்கு அருகில் லேண்டர் விக்ரம் கிடப்பதை படம் பிடித்து காட்டியது. லேண்டர் நிலவின் பரப்பில் உடைந்து விடாமல் முழுமையாக  இருப்பதாகவும், சாய்ந்து கிடப்பதாகவும் இஸ்ரோ தகவல்கள் தெரிவித்திருந்தன.

இஸ்ட்ராக் எனப்படும் இஸ்ரோவின் தொழில்நுட்பக் குழுவினர், லேண்டர் விக்ரமுடனான சிக்னலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இஸ்ரோ நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘லேண்டரின் சிக்னலை மீட்க அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளது. இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விக்ரம் லேண்டர் முழுமையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஆனால், அதன் 4 கால்கள் வழக்கமான நிலையில் இல்லை. லேண்டர் சாய்ந்த கோணத்தில் இருக்கிறது,’’ என்றார். லேண்டரின் ஆயுட்காலம் வெறும் 14 நாள் மட்டுமே. தற்போது 4 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Vikram Lander ,ISRO , Life .Vikram Lander, ISRO
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...