×

மொகரம் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு காஷ்மீரில் மீண்டும் கட்டுப்பாடு அமல்

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் மொகரம் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து காரணமாக அங்கு கடந்த மாதம் 5ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பிய பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தன. மேலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்காக மக்கள் அதிக அளவில் கூடும்போது போராட்டங்கள் நடத்த வாய்ப்புள்ளதால் அன்றைய தினம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் நேற்று 37வது நாளாக கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மொகரம் தினத்தையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு போன்று கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டன.

வர்த்தக நகரமான லால்சவுக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து நுழைவு வாயில்களிலும் முள்கம்பிகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு, பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு குறிப்பிட்ட எந்த காரணத்தையும் அதிகாரிகள் கூறவில்லை. எனினும் பள்ளத்தாக்கின் எந்த இடத்திலும் மொகரம் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், ஊர்வலங்கள் நடப்பதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. காஷ்மீரில் 1990ம் ஆண்டு முதல் மொகரம் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லஷ்கர் தீவிரவாதிகள் கைது
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கடந்த வாரம் சோப்பூரில் பழ வியாபாரியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, இப்பகுதியில் மக்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது எனவும் போஸ்டர்கள் மூலம் அச்சுறுத்தல் விடுத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



Tags : procession ,Mogaram , மொகரம் ஊர்வல,காஷ்மீர்
× RELATED தாந்தோணியம்மன் கோயிலில் 508 பால்குட ஊர்வலம்