×

தெற்காசியாவில் முதல் திட்டம் பீகாரில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் சப்ளை: பிரதமர் மோடி, சர்மா ஒலி தொடங்கி வைத்தனர்

புதுடெல்லி: பீகாரில் இருந்து நேபாள நாட்டுக்கு குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டத்தை பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் சர்மா ஒலியும் தொடங்கி வைத்தனர். பீகார் மாநிலம், மோதிஹரியில் இருந்து நேபாள நாட்டின் அமேல குஞ்ச் பகுதிக்கு பெட்ரோலிய உற்பத்தி பொருட்களை குழாய் மூலம் கொண்டு செல்லும் பணிக்கான பூமி பூஜை கடந்த ஆண்டு நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியா வந்திருந்தபோது தொடங்கப்பட்டது. 30 மாதங்களில் இந்த பணியை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், 15 மாதங்களில் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பீகார்- நேபாளம் இடையேயான சுமார் 69 கிமீ தொலைவுக்கு பதிக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோலிய குழாயின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
 இதை பிரதமர் மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டாக தொடங்கி வைத்தனர். தெற்காசியாவில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு எல்லை தாண்டி பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்லும் முதல் திட்டம் என்ற பெருமை இந்த திட்டத்துக்கு உண்டு.

முன்னதாக கடந்த 1973ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் இருந்து பெட்ரோலிய உற்பத்தி பொருட்கள் டேங்கர்களில் நேபாளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பெட்ரோலிய பொருட்களை குழாய்களில் கொண்டு செல்லும்  திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று பேசியதாவது; மிகச்சரியான தருணத்தில் குழாயில் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்லும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் மலிவு விலையில் எடுத்து செல்லப்படும். இந்தியா நேபாளம் இடையேயான இந்த எரிசக்தி ஒத்துழைப்பு திட்டமானது இரு தரப்பு உறவில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது என்பதன் அடையாளமாகும்.இதன் மூலம் பாதுகாப்பான முறையில் எரிசக்தியை கொண்டு செல்வது மட்டுமின்றி போக்குவரத்து செலவும் குறையும். இவ்வாறு மோடி பேசினார்.

Tags : Bihar ,Nepal , South Asia, Bihar, Petrol
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு