பாலம் இல்லாததால் இறந்தவர் உடலை வாய்க்காலில் இறங்கி சுமந்து செல்லும் அவலம்

சீர்காழி: சீர்காழி அருகே பாலம் இல்லாததால் இறந்தவர்  உடலை வாய்க்காலில் இறங்கி சுமந்து செல்லும் அவலம் தொடர்ந்து வருகிறது. நாகை  மாவட்டம் சீர்காழி தாலுகா மேலக்கொண்டத்தூர் கிராமத்தில் இறந்தவர்களின்  உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ உடல்களை எடுத்து செல்ல மெயின்ரோட்டில் இருந்து  1 கி.மீ தூரம் செல்ல வேண்டும். இதில் 300 மீ தூரம் வரை வண்டி செல்ல  முடியும். இடையில் வெள்ளாழன் வாய்க்கால் இருப்பதால் மீதமுள்ள 700 மீ தூரம்  வரை இறந்தவர் உடலை எரிக்க தேவைப்படும் மரக்கட்டைகளை சுமந்துதான் எடுத்து  செல்ல முடியும். இதேபோல் இறந்தவர் உடலையும் சுமந்து தான் செல்ல  வேண்டும்.

இதுபோன்ற நிலை தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த தேவதாஸ்(55) என்பவர் இறந்தார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாய்க்காலில் பாலம் இல்லாததால்  வாய்க்காலில் இறங்கி இறந்தவர் உடலை தோளில் சுமந்து சென்றனர். உடலை எரிக்க  தேவையான மரக்கட்டைகளைையும் சுமந்து எடுத்து சென்றனர். மேலும் தண்ணீர்  வந்தால் இறந்தவர்களின் உடலை தண்ணீரில் இறங்கி தூக்கி செல்லும் அவல நிலை  இருந்து வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி விரைவில் வெள்ளாழன்  வாய்க்காலின் பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : deceased , Bridge, dead body,
× RELATED மின் விளக்குகள் எரியாததால் இருண்டு கிடக்கும் பிள்ளையார்குப்பம் பாலம்