×

வேலூர்-ஒடுகத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் அரசு பஸ்களில் அடாவடி கட்டணம் வசூல்: பயணிகள் குற்றச்சாட்டு

வேலூர்: வேலூர்-ஒடுகத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் அரசு பஸ்களில் அடவாடி கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழகத்தில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் ஒவ்வொரு பஸ்களிலும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை எல்எஸ்எஸ் என்று அறிவித்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கிராமப்புற மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதேபோல், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதேபோல், வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் அரசு பஸ்களிலும் கட்டண கொள்ளை நடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், உரிய பதிலளிக்காமல் அலட்சியமாக பேசுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘வேலூரில் இருந்து அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஒடுகத்தூர் செல்ல அரசு பஸ்களில் ரூ25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் அரியூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்தது. இதன்காரணமாக வாகனங்கள் சுமார் 5கிமீ தூரம் பென்னாத்தூர் வழியாக சுற்றிச்சென்றன. இதனால் கூடுதலாக எரிபொருள் செலவு ஏற்பட்டது. இதற்காக வேலூர்- ஒடுகத்தூர் வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் ₹3 உயர்த்தி ரூ28 வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் அரியூர் ரயில்வே கேட் மேம்பாலம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு கட்டணம் பழையபடி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேலூர்-ஒடுகத்தூருக்கு அரியூர் ரயில்வே மேம்பாலம் வழியாக செல்லும் அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், உரிய பதிலளிக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஒடுகத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை வேலூருக்கு தினமும் விற்பனைக்காக பஸ்களில் கொண்டு வருகிறோம். எனவே, விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு முறையான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இயக்கப்படும் அரசு பஸ்கள்
வேலூரில் இருந்து ஒடுகத்தூர் வழித்தடத்தில் 101 ஜே, 102 ஏஏ, 104 ஏ, 104 பி, 105, 112, 115, 444, 216 எச் ஆகிய எண்கணில் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ரூ25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த பஸ்களில் ரூ28 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வேலூரில் இருந்து விமான நிலையம் வழியாக ஒடுகத்தூருக்கு செல்லும் 103, 115 ஆகிய எண்களில் இயங்கும் அரசு பஸ்களில் ரூ25 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், விமான நிலையம் வழியாக வேலூர்-ஒடுகத்தூருக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களிலும் ரூ28 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Govt ,Vellore - Odukathur , Vellore-Odugathur, Government Bus, Fare
× RELATED புதிய குடும்ப அட்டைகள்...