×

சோளிங்கர் ரயில் நிலையத்தில் அதிகாலை குழந்தையை கடத்த முயற்சி வாலிபருக்கு தர்மஅடி

சோளிங்கர்: சோளிங்கர் ரயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 1 வயது குழந்தையை கடத்த முயன்ற வாலிபரை பிடித்து கம்பத்தில் கடித்து வைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். அந்த வாலிபரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் சோளிங்கர் ரயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளங்களில் ஜல்லி கற்கள் நிரப்பும் பணியில், தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவு பணி முடிந்த பிறகு தொழிலாளர்கள் அனைவரும் ரயில்நிலைய பிளாட்பார பகுதியில் தூங்கினர்.

இதில் துர்காபிரசாத்(22), அவரது மனைவி பார்வதி ஆகியோர் தங்களது 1 வயது குழந்தையுடன் தூங்கினர். இன்று அதிகாலை 4மணியளவில் குழந்தை திடீரென அழுதுள்ளது. இதனால் துர்காபிரசாத், பார்வதி ஆகியோர் கண்விழித்து பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், குழந்தையை தூக்கிச்செல்ல முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதனால் அந்த வாலிபர், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினார். சத்தம் கேட்ட சக தொழிலாளர்கள், அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் பிளாட்பாரத்தில் இருந்த கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தொழிலாளர்கள் காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டு விசாரித்தனர். அவர் வாலாஜா அணைக்கட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தினேஷ்(30) என்பதும், குடிபோதையில் குழந்தையை தூக்க முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தினேஷை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : railway station ,Sholingar , Sholingar, train station, smuggling, charity
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...