×

முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்ற முதல்வர் பழனிசாமி வெறுங்கையுடன் திரும்பியுள்ளார் : திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

சென்னை : முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்ற முதல்வர் பழனிசாமி வெறுங்கையுடன் திரும்பியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்ட 443 ஒப்பந்தங்களில் எத்தனை கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடு பற்றி 2 நாட்களில் மக்களுக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், 2 நாட்களில் பதில் தராவிட்டால் வெளிநாட்டு பயணம் மர்மம் என்ற உண்மை உறுதியாகிவிடும் என்று எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து வந்த முதல்வருக்கு அரசு பணத்தில் விளம்பரம் வெளியிடுவது நிதி ஓழுங்கீனம் என்றும் அறிக்கையில் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளும் கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் திமுக ஆட்சியில் பெறப்பட்டவை என்றும் திமுக ஆட்சியில் 2006 முதல் 2010ம் ஆண்டு வரை ரூ.46,091 கோடி முதலீடு பெறப்பட்டு 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.  அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஒருவாரத்தில் பாராட்டு விழா நடத்த தயார் என்றும் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

தொடர்ந்து ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு,என் சவாலை முதல்வர் பழனிசாமி ஏற்றுக் கொள்ள தயாரா?.முதல்வரும் அமைச்சரும் ஒரு நாள் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். சிலரை பல்நாள் ஏமாற்றலாம்; பலரைச் சிலநாள் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது. என் மீதான முதல்வர் விமர்சனம் பாடத் தெரியாமல் பக்க வாத்தியத்தில் குறை என்பது போல உள்ளது. 2015,2019 முதலீட்டாளர்கள் மாநாடு ஒப்பந்தங்கள் என்ன ஆனதென்றே தெரியவில்லை. திமுக ஆட்சியில் கண்ட தொழில் வளர்ச்சி தெரியாமல் முதல்வர் பேட்டி அளித்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : Palanisamy ,Stalin ,DMK , DMK, President, Stalin, Report, White
× RELATED தூத்துக்குடியில் முதல்வர்...